கர்நாடகாவில் பி.யு., தேர்வில் 86.48 சதவீதம் பேர் தேர்ச்சி வணிக பாடத்தில் 600 க்கு 600 எடுத்து 2 மாணவியர் சாதனை

பெங்களூரு: கர்நாடகாவில் பி.யு., தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின; 86.48 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர். வணிக பாடத்தில், 600க்கு 600 மதிப்பெண் எடுத்து இரு மாணவியர் சாதனை படைத்து உள்ளனர்.

கர்நாடகாவில், கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி துவங்கிய பி.யு., 2ம் ஆண்டு தேர்வுகள் மார்ச், 17ம் தேதி வரை நடந்தன. தேர்வு முடிவுகள் நேற்று மதியம், 3:00 மணிக்கு வெளியாகின.

பாகல்கோட், தாவணகெரே தெற்கு தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு முடிந்த பின், நேற்று மாலை, 6:30 மணிக்கு, பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கர்நாடக பள்ளி தேர்வுகள் மற்றும் மதிப்பீடு வாரிய அலுவலகத்தில், பள்ளி கல்வி அமைச்சர் மது பங்காரப்பா அளித்த பேட்டி:

பி.யு., இரண்டாம் ஆண்டு தேர்வை எழுத மொத்தம், 6,48,853 மாணவ, மாணவியர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 16,653 பேர் தேர்வுக்கு வரவில்லை; 6,32,200 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.

அவர்களில், 5,46,698 பேர் வெற்றி பெற்று உள்ளனர். மொத்த தேர்ச்சி, 86.48 சதவீதம். கடந்த ஆண்டை விட, 13.03 சதவீதம் தேர்ச்சி விகிதம் கூடியுள்ளது. 86.48 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றது வரலாற்று சிறப்புமிக்கது. அதேநேரம் தேர்வில், 85,502 பேர் தேர்ச்சி பெறவில்லை.

கலை பாடப்பிரிவில் பல்லாரி மாவட்டம் கூட்லிகி தாலுகா கொட்டூரில் உள்ள, ஹிந்து பி.யு., கல்லுாரி மாணவி அர்ச்சனா, 600 க்கு 598 மதிப்பெண்கள் எடுத்து, மாநில அளவில் முதல் இடம் பிடித்து உள்ளார். வணிக பாடப்பிரிவில் பெங்களூரு வி.வி.புரத்தில் உள்ள மஹாவீர் ஜெயின் கல்லுாரி மாணவி அதிதி பாபு; தட்சிண கன்னடாவின் மூடபித்ரி ஆலுவா பி.யு., கல்லுாரி மாணவி திஷா ஆகியோர், 600 க்கு 600 மதிப்பெண் எடுத்து, மாநில அளவில் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளனர்.

அறிவியல் பாடப்பிரிவில் மங்களூரு ஆனந்த்நகர் ஆகாஷ பவனில் உள்ள, தி லெர்னிங் சென்ட்ரல் பி.யு., கல்லு ாரி மாணவி பிரின்சில்லா கர்டோசா, 600க்கு 599 மதிப்பெண்கள் எடுத்து, மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். அவர்களுக்கான மறுதேர்வு வரும், 30ம் தேதி துவங்கி அடுத்த மாதம், 13ம் தேதி வரை நடைபெறுகிறது.

தேர்வில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு என் வாழ்த்துக்கள். பி.யு., தேர்வு முடிவை வெளியிடும் தேதி அறிவிப்பதில் எந்த குழப்பமும் ஏற்படவில்லை. டிஜிலாக்கர் மூலம் மதிப்பெண் பட்டியலை தரவிறக்கம் செய்து கொள்வதை வடிவமைக்க, ஒரு ஆண்டு காலமானது. தற்போதும் இந்த காரணத்தால் தாமதமானது. எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள் வெளியாகும் சரியான தேதியை அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement