மாவட்டத்தில் 4 தொகுதிகளில் சுயேச்சைகள் அதிகரிப்பால் சிக்கல்! ஒவ்வொரு ஓட்டு சாவடிகளும் 2 மிஷின்கள் பயன்படுத்தும் நிலை

ஸ்ரீவில்லிபுத்துார்:ஒரு ஓட்டுப் பதிவு எந்திரத்தில் 15 வேட்பாளர்களின் சின்னத்திற்குரிய பட்டன்கள் மற்றும் ஒரு நோட்டா பட்டன்கள் மட்டுமே உள்ள நிலையில் ராஜபாளையம், சாத்துார், அருப்புக்கோட்டை, திருச்சுழி தொகுதிகளில் 22க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் 2 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பொருத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் ஓட்டுப்பதிவு ,ஓட்டு எண்ணிக்கையின் போது தேர்தல் அலுவலர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மாவட்டத்தில் ராஜபாளையத்தில் 22, ஸ்ரீவில்லிபுத்தூரில் 14, சிவகாசியில் 14, சாத்தூரில் 22, விருதுநகரில் 15, அருப்புக்கோட்டையில் 25, திருச்சுழியில் 23 என மொத்தம் 135 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் 15 வேட்பாளர்களின் சின்னங்களுக்கான பட்டன்களும் ஒரு நோட்டா பட்டன் உட்பட 16 பட்டன்கள் மட்டுமே இருக்கும். இதில் 15 வேட்பாளர்களை கடந்து, கூடுதலாக ஒரு வேட்பாளர் இருந்தால் கூட இரண்டாவதாக ஒரு ஓட்டுப்பதிவு எந்திரம் பொருத்தப்பட வேண்டிய நிலை ஏற்படும். இதனால் ஓட்டுப்பதிவு ,ஓட்டு எண்ணிக்கையின் போது ஓட்டுச்சாவடி அலுவலர்கள் முதல் ஓட்டு எண்ணிக்கை அலுவலர்கள் வரை கடும் சிரமத்தை சந்திக்க வேண்டியது ஏற்படும்.

மேலும் ஓட்டு போடும் வாக்காளர்களும் இரண்டாவது எந்திரத்தை தேடி பிடித்து ஓட்டு போடுவதில் காலதாமதம் ஏற்படும். இதனால் ஓட்டுப்பதிவு நாளன்று மாலை 6:00 மணிக்கு முடிவடைய வேண்டிய ஓட்டுப்பதிவு இரவு வரை நீடிக்கும் நிலை உருவாகும்.

15 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டால் அனைத்து பணிகளுமே விரைவாக, எளிதாக முடியும் என்று உள்ள நிலையில், சுயேச்சை வேட்பாளர்கள் களம் இறங்குவது ஜனநாயக உரிமை. ஆனால், வேட்பு மனு தாக்கலில் அவர்கள் செய்யும் குளறுபடியால், மனுக்கள் தள்ளுபடி ஆவதும் வழக்கம்.

இந்நிலையில் ஓட்டு எண்ணிக்கையின் போது தங்களுக்கு கூடுதல் நபர்கள் தேவைப்படுவதால் அரசியல் கட்சியினரே ஒவ்வொரு தொகுதியிலும் பல சுயேச்சை வேட்பாளர்களை களம் இறக்குவது பல தேர்தல்களில் நடந்து வருகிறது.

அதன்படி தற்போது சட்டசபை தொகுதிகளிலும் பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்களை கடந்து 13க்கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழியில் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளிலும் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் இரண்டு ஓட்டு பதிவு எந்திரங்கள் பொருத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் இத்தகைய செயலால் வாக்காளர்களும், ஓட்டு சாவடி தேர்தல் அலுவலகம் ஓட்டுகள் எண்ணிக்கை அலுவலர்களும் மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது.

எனவே, அரசியல் கட்சிகளின் இத்தகைய செயல்களை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பது எதிர்காலத்தில் அவசியமாகும்.

Advertisement