ரசாயனங்களுக்கு சுங்கவரி விலக்கு: ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு

திருப்பூர்: ''ரசாயனங்களுக்கான, சுங்கவரி விலக்கால், ஜவுளி மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் உற்பத்தி செலவும் கணிசமாக குறையும்'' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் அறிக்கை:

மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழலால், பல்வேறு மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளது; பொதுமக்களும், தொழில்துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு தொழில்துறையினர், புதிய விலை உயர்வு சவாலை எதிர்கொண்டுள்ளனர். எதிர்பாராத சவாலுக்கு தீர்வு வழங்கும் வகையில், மத்திய நிதித்துறை அமைச்சகம், முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.

நம் நாட்டுக்கு இறக்குமதியாகும், அசிட்டிக் அமிலம், மெத்தனால், அம்மோனியம், நைட்ரேட் உள்ளிட்ட 40 வகை பெட்ரோ கெமிக்கல் மற்றும் பாலிமர் பொருட்களுக்கு சுங்கவரியில் இருந்து வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி விலக்கு, ஜூன் மாத இறுதி வரை அமலில் இருக்கும். ஜவுளி பேக்கேஜ், சாயமிடுதல் பிரின்டிங் போன்ற தொழில்கள் பரவலாக பயன்படுத்தும், பொருட்களும் வரிவிலக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், ஜவுளி மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் உற்பத்தி செலவும் கணிசமாக குறையும்.

தற்போதைய உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில், மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுத்துள்ளது; இத்தகைய அறிவிப்பால், தொழில்துறையினர், தற்போதைய சவால்களை சமாளிக்க முடியும். ஜவுளித்துறை எதிர்கொள்ளும், உள்ளீட்டு மற்றும் எரிசக்தி செலவுகள் குறைந்து, பொருளாதார அழுத்தமும் குறையும். இதன் வாயிலாக, உற்பத்தி செலவுகள் கட்டுப்பாட்டில் வைக்கப்படும்; உலகளாவிய சந்தைகளில் போட்டித்திறனை நிலை நிறுத்தவும், இது முக்கிய பங்களிப்பாக அமையும்.

---

சுப்பிரமணியன் படம்

Advertisement