நரிக்குடி பகுதியில் கள், கஞ்சா விற்பனை: கட்டுப்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு

காரியாபட்டி:நரிக்குடி பகுதியில் கள், கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நரிக்குடி பகுதியில் இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதிகள், பஸ் ஸ்டாப்புகள், கிராம எல்லை பகுதிகளில் இது போன்ற கஞ்சா, கள் விற்பனை நடக்கின்றன. நேற்று வீரசோழன் இன்ஸ்பெக்டர் கீதாதேவி , போலீசாருடன் ரோந்து சென்ற போது சுள்ளங்குடி பஸ் ஸ்டாப்பில் சுற்றித்திரிந்த 3 நபர்களைப் பிடித்து விசாரித்ததில் கஞ்சா விற்பனை செய்தது தெரிந்தது. விசாரணையில் நல்லுகுறிச்சியை சேர்ந்த முத்திருலாண்டி 26, பெரியசாமி 19, சுள்ளங்குடி குருமூர்த்தி 20 என தெரிந்தது. அதேபோல் நரிக்குடி இன்ஸ்பெக்டர் அழகு மாரியப்பன் (பொறுப்பு ) மானாசாலை சோதனைச் சாவடியில் ஆய்வு செய்த போது, சாக்கு பையுடன் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்ததில் கேன்களில் 5 லிட்டர் பனைமர கள் இருந்தது. விசாரித்ததில் நெடுகனேந்தல் முனியசாமி 20, எனவும் பார்த்திபனூர் பகுதியில் இருந்து வாங்கி, விற்பனைக்கு கொண்டு வந்ததாக தெரிந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் பல்வேறு இடங்களில் சட்டவிரோத கள், கஞ்சா விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டால் மேலும் பலர் சிக்குவர். சட்ட விரோத போதை வஸ்துகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் .

Advertisement