அனுமதியின்றி போர்வெல் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி ஒன்றியம், மொட்டனூத்து ஊராட்சி ஆசாரிபட்டி கண்மாய் கரையில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் அனுமதி இன்றி துவக்கப்பட்ட போர்வெல் அமைக்கும் பணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
தமிழகம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு விதிகளை மீறி சிறப்பு கவனிப்புகள் செய்கின்றனரா என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ஆண்டிபட்டி தொகுதி, ஆசாரிபட்டி கிராமத்தில் கண்மாய் கரையில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் போர்வெல் அமைக்கும் பணி துவங்கியது. இது குறித்து அ.தி.மு.க., மற்றும் சில அரசியல் கட்சியினர் ஆண்டிபட்டி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் கொடுத்தனர். இது குறித்து நேரில் சென்று விசாரிக்க அதிகாரிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஆசாரிபட்டிக்கு சென்ற வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் போர்வெல் அமைக்க உத்தரவிட்டது யார் என்பது குறித்தும் இதில் அரசியல் கட்சியினர் தலையீடு உள்ளதா என்பது குறித்தும் விசாரித்தனர்.
உரிய தகவல் இல்லாததால் வருவாய்த்துறையினர் ராஜதானி போலீசில் புகார் கொடுத்தனர். போர்வெல் அமைக்கும் பணியில் பிரச்சினை ஏற்பட்டதால், வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் வந்திருந்த போர்வெல் லாரியை அங்கிருந்து கொண்டு சென்றனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறி அரசு நிலத்தில் போர்வெல் அமைக்க ஏற்பாடு செய்தவர்கள் குறித்து மாவட்ட அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று இது பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.