மீண்டும் 'கரூர்' மாடலுக்கே திரும்புகிறாரா விஜய் :காலை 7:00 மணி முதலே காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம் * மதுரையில் விஜய் முன்பு தொண்டரை பூட்ஸ் காலால் மிதித்து தள்ளிய பவுன்சர்

1

மதுரை: தேர்தல் பிரசாரத்திற்காக காரைக்குடி செல்வதற்காக மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட த.வெ.க., தலைவர் விஜய், கரூர் சம்பவத்தை நினைவூட்டும் வகையில் திட்டமிடாமல் தனது நிகழ்ச்சிகளை மாற்றியதால் குழப்பமும், பதட்டமும் ஏற்பட்டது. மதுரையில் இருந்து அவர் சென்றபோது டூவீலரில் பின்தொடர்ந்து சென்ற இருவர் தடுமாறி கீழே விழுந்து காயமுற்றனர். ரிங்ரோடு சுங்கச்சாவடி அருகே விஜய்க்கு கைகொடுக்க வேனில் ஏற முயற்சித்த தொண்டரை பவுன்சர், பூட்ஸ் காலால் மிதித்தார்.

காரைக்குடியில் பிரசாரம் செய்வதற்காக விஜய், தனிவிமானத்தில் சென்னையில் இருந்து காலை 10:10க்கு மதுரை வந்தார். அவரை பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார், வேட்பாளர்கள் வரவேற்றனர். முன்னதாக விமான நிலையத்தில் காத்திருந்த ஆனந்த்திடம், 'மதுரையில் எப்போது விஜய் பிரசாரம் செய்கிறார்' என நிருபர்கள் கேட்டதற்கு, 'எங்கே அனுமதி கொடுக்கிறார்கள்' என விரக்தியாக பதில் அளித்தார்.

விஜயின் பிரசார வாகனம்- விமான நிலையத்திற்குள் இருந்து பயணிகள் வெளியே வரும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின் வரும் போது கூட, அவரது வாகனம்கூட இந்த இடத்தில் நிறுத்தப்படுவதில்லை.

பிரசார வாகனத்தில் நின்றபடி காரைக்குடி நோக்கி விஜய் காலை 10:30 க்கு புறப்பட்டார். முன்னதாக அவரது பிரசார வாகனத்தின் மீது சிலர் பாக்கெட் பாலாபிஷேகம் செய்தனர். மதுரை ரிங் ரோட்டில் செல்லும்போது வழக்கம் போல் அவரை டூவீலரில் தொண்டர்கள் பின்தொடர்ந்து சென்றனர். இதில் ஒரு டூவீலரில் வந்த 2 பேர், தடுமாறி கீழே விழுந்து காயமுற்றனர். பின்னர் மீண்டும் பின்தொடர்ந்து சென்றனர்.

வண்டியூர் சுங்கச்சாவடி அருகே பிரசார வாகனம் மெதுவாக சென்றபோது தொண்டர்கள் வேன் மீது ஏறி விஜய்க்கு கைகொடுக்க முயன்றனர். அப்போது 'டாப்'பில் இருந்த பவுன்சர், பூட்ஸ் காலால் தொண்டர் ஒருவரின் கையை மிதித்து கீழே தள்ளினார். விஜய் வாகனம் மீது பிளாஸ்டிக் பாட்டில் வீசிய ராஜசேகரன் என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆறரை மணி நேரம் காத்திருப்பு



காரைக்குடியில் மதியம் 12:00 மணி முதல் 2:30 மணி வரை விஜய் பிரசாரம் செய்ய 16 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர். ஆனால் விஜய் தாமதமாக வந்ததால் ஒருவார்த்தைக்கூட பேசாமல் மதியம் 2:38 மணிக்கு திருச்சிக்கு புறப்பட்டார். விஜய் எதுவும் பேசாமல் சென்றது தொண்டர்களை விரக்தி அடைய செய்தது.

மீண்டும் கரூர் 'மாடலா'



தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வரும் முன்பு, விஜய் கூட்டத்திற்கு போலீசாரிடம் அனுமதி பெற த.வெ.க.,வினர் போராட வேண்டியிருந்தது. 'இதற்கு தி.மு.க., அரசும், ஸ்டாலின் சாரும்தான் காரணம்' என்று மேடைதோறும் விஜய் சொல்லி வந்தார். தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துபின், தேர்தல் கமிஷனின் நடவடிக்கைக்கு பயந்து போலீசார் மாவட்டந்தோறும் அனுமதி வழங்கி வருகின்றனர். நெல்லையில் விஜய் பேசும்போது இதை சுட்டிக்காட்டினார்.

கடந்தாண்டு கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர். இதன்பிறகு போலீசார் அனுமதி வழங்க அதிக கெடுபிடி காண்பித்தனர். இதன்காரணமாக குடிநீர் வசதி, தொண்டர்களுக்கு பந்தல் என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை த.வெ.க., எடுத்தது. தற்போது மாவட்டந்தோறும் அடுத்தடுத்து அனுமதி கிடைப்பதால் விஜய் தரப்பில் பந்தல் அமைப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை.

இதுதொடர்ந்தால், திட்டமிடப்படாத, தாமதமான நிகழ்வுகளாலும், கட்டுக்கடங்காத கூட்டத்தாலும் மீண்டும் கரூர் சம்பவம் போல் நடக்க வாய்ப்பு உள்ளது. இதைகருத்திற்கொண்டு கட்சித் தலைவரான விஜய் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தேர்தலில் வெற்றி எப்படி 'ஷாக்' ஆன விஜய்



மதுரை விமான நிலையத்திற்கு வந்த விஜயை முன்னாள் எம்.எல்.ஏ.,வான சோழவந்தான் த.வெ.க., வேட்பாளர் கருப்பையா வரவேற்றார். அப்போது விஜய்க்கு 'தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி' என்ற புத்தகத்தை வழங்கினார். புத்தக தலைப்பை பார்த்ததும் 'ஷாக்' ஆன விஜய், வழக்கம் போல் எந்த 'ரியாக் ஷனும்' காண்பிக்காமல் புறப்பட்டு சென்றார்.

Advertisement