திருச்சூருக்கு நேரடி பஸ் இயக்க இருமாநில மக்கள் கோரிக்கை 

1

வால்பாறை: சாலக்குடி வழியாக திருச்சூருக்கு அரசு பஸ் இயக்க வேண்டும், என, இருமாநில மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள வால்பாறையிலிருந்து, மளுக்கப்பாறை, அதிரப்பள்ளி அருவி வழியாக கேரள மாநிலம் சாலக்குடிக்கு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர, சாலக்குடியிலிருந்து அதிரப்பள்ளி அருவி வழியாக மளுக்கப்பாறைக்கு தினமும், காலை முதல் மாலை வரை கேரள மாநில அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இயக்கப்பட்ட அரசு பஸ் நிறுத்தப்பட்டதால், இருமாநில மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பொதுமக்கள் கூறுகையில், 'தமிழக - கேரள எல்லையில் வால்பாறை அமைந்துள்ளதால், சுற்றுலா பயணியர் அதிக அளவில் சாலக்குடி வழித்தடத்தில் உள்ள அதிரப்பள்ளி, சார்பா உள்ளிட்ட அருவிகளுக்கும் சென்று வருகின்றனர்.

இது தவிர, வால்பாறையில் கேரளாவை சேர்ந்த மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். எனவே இருமாநில மக்கள் மற்றும் சுற்றுலா பயணியர் நலன் கருதி, வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் சாலக்குடி வழியாக திருச்சூருக்கு பஸ் இயக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement