குரங்குகளின் தொல்லையால் மக்கள் அவதி

மேட்டுப்பாளையம்: பங்களா மேடு, வ.உ.சி., பள்ளி வளாக பகுதியில், குரங்குகளின் தொல்லையால் மக்களும், பள்ளி சிறுவர்களும் அவதிப்படுகின்றனர்.

மேட்டுப்பாளையம் பங்களா மேடு பகுதியில், வ.உ.சி., துவக்கப்பள்ளி, ராஜபுரம், மொக்கை ஆகிய பகுதிகளில், முன்னூறுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடும்படி, மக்கள் பல முறை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும், வனத்துறை குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுகுறித்து பங்களா மேடு மக்கள் கூறியதாவது: இங்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன், நான்கு குரங்குகள் சுற்றி வந்தன. இந்த குரங்குகளை விரட்டும் போது, அருகே உள்ள தென்னை மரங்களில் ஏறிக் கொள்கின்றன. நான்கு குரங்குகளை பிடிக்காததால், தற்போது, 20க்கும் மேற்பட்ட குரங்குகளாக அதிகரித்துள்ளன. எங்கள் குடியிருப்பு பகுதியில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி குழந்தைகள் ஏதேனும் உணவு பொருட்களை சாப்பிட்டால், குரங்குகள் அதை பிடுங்கி சாப்பிடுகின்றன. அதை விரட்டினால் கடிக்க வருகிறது.

வீடுகளில் கதவை திறந்து வைத்து சமைக்க முடிவதில்லை. திறந்து இருக்கும் வீட்டின் உள்ளே புகுந்து, உணவு பொருட்களை சேதம் செய்து வருகின்றன. வெளியே குழந்தைகள் படிக்கும் போது, குரங்குகள் புத்தகம், பென்சில் பாக்ஸ் ஆகியவற்றை எடுத்து செல்கிறது. அதை இரண்டு வீடுகள் தள்ளி போட்டு விடுகிறது. புத்தகத்தை கிழித்து போடுகிறது. மாடியில் தண்ணீர் தொட்டியின், மூடியை கழற்றி கீழே போட்டு, தொட்டி தண்ணீரில் குளிக்கிறது. தண்ணீர் வரும் பைப்புகளை உடைக்கிறது.

குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே வனத்துறையினர் கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மக்கள் கூறினர்.

Advertisement