மலைப்பாதையில் சாகச பயணம்; போலீசார் எச்சரிக்கை

மேட்டுப்பாளையம்: மலைப்பாதையில் பைக்குகளில் அத்துமீறி வேகமாக செல்வது, சாகசங்கள் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என மேட்டுப்பாளையம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி மாவட்டத்திற்கு ஊட்டி மற்றும் கோத்தகிரி வழியாக செல்லும் சாலைகளில், இருபக்கம் அடர் வனப்பகுதிகள் உள்ளன. இதனால் இயற்கை காட்சிகள் அதிகம் காணப்படுகின்றன.

இதை ரசிக்கவும், ஊட்டிக்கு சுற்றுலா செல்லவும் சுற்றுலா பயணிகள் பலர் கார் மற்றும் பைக்குகளில் வருகின்றனர்.

இதில் சிலர் அதிவேகமாக பைக்குகளை இயக்கி, முன்பக்க டயரை தூக்கியவாறு ஓட்டுவது, திடீரென பிரேக் பிடித்து சறுக்கி நிறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அதே போல் கார்களில் 'சன்ரூப்' வைத்திருப்போர், அதன் வழியாக தலை அல்லது உடலை வெளியே நீட்டி பயணம் செய்வதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் அதிகம் பயணிப்பது குழந்தைகள் ஆகும்.

இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீசார் கூறியதாவது:

மலைப்பாதைகளில் சாகச பயணத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போட்டு லைக் வாங்க இப்படி செய்யக்கூடாது. இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். பிறருக்கும் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.

அதே போல் 'சன்ரூப்' பயணம் மித வேகத்தில் இருந்தால் ஆபத்து இல்லை. ஆனால் வேகமாக செல்லும் போது, திடீரென பிரேக் பிடித்தாலோ அல்லது விபத்து ஏற்பட்டால் கடுமையான விளைவுகள் நேரிடும். தலையில் காயம் மற்றும் உயிரிழப்புக்கு கூட வழிவகுக்கும். குழந்தைகள் நின்றுக்கொண்டு பயணம் செய்தால், வேகத்தடை மீது வேகமாக கார் ஏறினால், வெளியே தூக்கி வீசப்படலாம். இவ்வாறு போலீசார் கூறினர்.

--------

Advertisement