ரயில்வே ஸ்டேஷன்களுக்கு நேரடி பஸ் வசதி இல்லை...சிரமம்: வாகன வசதியின்றி கூடுதல் கட்டணங்களால் வேதனை

ராஜபாளையம்:மாவட்டத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் இருந்து பஸ் ஸ்டாண்டிற்கு செல்வதற்கான நேரடி அரசு பஸ், மினி பஸ்கள் இயக்காததால் அதிக கட்டண சுமைகளுக்கு பயணிகள் ஆளாகின்றனர்.

மாவட்டத்தில் அமைந்துள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் பயணிகளின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப புதிய ரயில்கள், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஸ்பெஷல் ரயில்கள் நீட்டிப்பு என ரயில் பயணிகளுக்கான போக்குவரத்திற்கு வசதிகள் அதிகரித்து வருகின்றன. குடும்பத்தினருடன் பாதுகாப்பான பயணத்திற்கு முதல் தேர்வாக ரயில் பயணம் உள்ளது.

இந்நிலையில் அதிகரித்துள்ள ரயில் பயணிகள் போக்குவரத்துக்கு ஏற்ப ரயில்வே ஸ்டேஷன்களில் இருந்து பஸ் ஸ்டாண்டுக்கு செல்ல நேரடி பஸ் வசதி போதிய அளவு இல்லை.

குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன்கள் நகர் பகுதியில் இருந்து குறைந்தது 1.5 கி.மீ தொலைவில் உள்ளது. இதேபோன்று சிவகாசி, நரிக்குடி, திருச்சுழி, விருதுநகர் ஸ்டேஷன்கள் நிலை உள்ளது.

ராஜபாளையம், சாத்துார், திருத்தங்கல் அருகில் அமைந்துள்ளது. இருப்பினும் இரவு நேரங்களில் பயணிகள் இரண்டு மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோக்களில் பயணிக்க வேண்டி உள்ளது.

இப்பகுதிகள் வழியாக பல மாநிலங்களுக்கும் ரயிலில் பயணம் செய்யலாம். அந்த வசதியை முழுமையாக இப்பகுதி பயணிகள் பயன்படுத்த நேரடி பஸ் போக்குவரத்து வசதி அவசியம்.

அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் எப்போதும் இதே சிக்கல்தான்.

இரண்டு இடங்களில் ரயில்வே ஸ்டேஷன் வரை மினி பஸ்கள் நிறுத்த அனுமதி கேட்டும் பல மாதங்களாக அனுமதி கிடைக்காமல் உள்ளது. ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் மினி பஸ்கள் நிற்பதற்கு அங்குள்ள ஆட்டோக்கள் தொடர் பிரச்சனை ஏற்படுத்தி வருவதை சரி செய்ய வேண்டும். இரவு நேரங்களில் ரயில்வே ஸ்டேஷன் வரை வழித்தடத்தை நீட்டிக்க வேண்டும்.

எனவே அதிகரித்த பயணிகளின் தேவைக்கேற்ப பொது போக்குவரத்தான நேரடி அரசு பஸ், மினி பஸ் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement