சூலுாரை மிஞ்சுமா வால்பாறை:  தங்க காசு அறிவிப்பால் குஷி

வால்பாறை: சட்டசபை தேர்தலில் சூலுரை விட, வால்பாறையில் அதிக அளவில் ஓட்டு வாங்க வேண்டும், என, முன்னாள் அமைச்சர் கூறியது, கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அங்கலக்குறிச்சியில், தி.மு.க., வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது:

சட்டசபை தேர்தலில், கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும். வீடு தவறாமல் சென்று ஓட்டு சேகரிக்க வேண்டும். பூத் கமிட்டி நிர்வாகிகள் ஒவ்வொரு வீடாக சென்று மக்களை சந்திக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு பூத்தை இரண்டாக பிரித்து ஓட்டுசேகரிக்க வேண்டும்.

சூலுரை விட, வால்பாறையில் இந்த முறை அதிகளவில் ஓட்டு வாங்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி. ஆனால், சூலுரை விட வால்பாறை தொகுதியில் தி.மு.க.,வுக்கு அதிக ஓட்டு வாங்க வேண்டும். இந்த தேர்தலில் அதிக ஓட்டு வாங்கித்தரும் நிர்வாகிகளுக்கு தலா ஒரு பவுன் தங்க காசு வழங்கப்படும்.

இவ்வாறு, பேசினார்.

Advertisement