ஆற்றில் கட்டடக்கழிவு குவிப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்

வால்பாறை: வால்பாறையில், நீர்நிலைகளில் கட்டடக்கழிவு கொட்டப்படுவதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை நகரில், சமீப காலமாக விதிமுறையை மீறி அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும் பணி நடக்கிறது. முறையாக அனுமதி பெறாமலும், அனுமதிக்கு முரணாகவும் அடுக்கு மாடி கட்டடங்கள் கட்டப்படுகிறது. இந்நிலையில், புதிய கட்டடம் கட்டும் போது, அந்த இடத்தில் இருந்த பழயை கட்டடக்கழிவுகளை ரோட்டின் ஓரத்திலும், நீர்நிலைகளிலும் கொட்டுகின்றனர்.

குறிப்பாக, சோலையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில், சமீப காலமாக கட்டடக்கழிவுகள் கொட்டப்படுகின்றன.

இது குறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், 'வால்பாறை மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் விதிமுறையை மீறி கட்டடங்கள் கட்டும் பணி நடக்கிறது. அங்குள்ள பழைய கட்டடக்கழிவுகள் ரோட்டோரத்திலும், ஆற்றில் நீர்வழிப்பாதையை அடைத்தும் கொட்டப்படுகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, கட்டடக்கழிவு கொட்டிய வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement