கர்நாடகா வனத்தில் மாயமான சிறுமி: இரு நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு

பாலக்காடு: கர்நாடக மாநிலம், சிக்கமகளூருவுக்கு சுற்றுலா சென்று இடத்தில், மாயமான பாலக்காடு சேர்ந்த 15 வயது சிறுமி 1,500 அடி ஆழ பள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கடம்பழிப்புறத்தை சேர்ந்த ரமேஷ் - ரோகிணி தம்பதியரின் மகள் ஸ்ரீநந்தா, 15. பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். கடந்த 7ம் தேதி காலையில், சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த, 40 பேர் கர்நாடகா மாநிலம், சிக்கமகளூருவுக்கு இரு நாள் சுற்றுலா சென்றனர்.

'பாபாபுதன்கிரி' மலைத்தொடரில் உள்ள மாணிக்கதாரா அருவி பகுதியில், 7ம் தேதி மாலை பெற்றோருடன் சிறுமி இருந்துள்ளார். திடீரென ஸ்ரீநந்தாவை காணவில்லை.

கர்நாடக மாநில போலீசார், வனத்துறை, தீயணைப்புப்படையில் கடந்த இரு நாட்களாக தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று மாணிக்கதாரா அருவி அருகிலுள்ள, 1500 அடி ஆழமான பள்ளத்தில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

சுற்றுலா சென்ற இடத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம், கடம்பழிப்புறம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement