தங்கம் வென்றார் விஷ்வநாத்: ஆசிய குத்துச்சண்டையில் கலக்கல்

உலான்பாடர்: ஆசிய குத்துச்சண்டையில் இந்திய வீரர் விஷ்வநாத் சுரேஷ் தங்கம் வென்றார்.

மங்கோலியாவில், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. ஆண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவு பைனலில், இந்தியாவின் விஷ்வநாத் சுரேஷ், ஜப்பானின் டாய்ச்சி இவாய் மோதினர். இதில் விஷ்வநாத் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
மற்றொரு பைனலில் (60 கிலோ) இந்தியாவின் சச்சின் சிவாச், 'நடப்பு உலக சாம்பியன்' கஜகஸ்தானின் ஓராஸ்பெக் அஸ்சில்குலோவ் மோதினர். இதில் ஏமாற்றிய சச்சின் 2-3 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.


ஆண்கள் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என, 6 பதக்கம் கிடைத்தது. இந்தியா சார்பில் ஹர்ஷ் துபே (90 கிலோ), ஆகாஷ் (75), லோகேஷ் (85), நரேந்தர் (+90) வெண்கலம் கைப்பற்றினர்.

இத்தொடரில் இந்தியாவுக்கு 5 தங்கம், 3 வெள்ளி, 8 வெண்கலம் என, மொத்தம் 16 பதக்கம் கிடைத்தது. ஏற்கனவே பெண்கள் பிரிவில் இந்தியாவுக்கு 10 பதக்கம் (4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) கிடைத்திருந்தது.

Advertisement