மதுவா அகதிகளுக்கு குடியுரிமை மே.வங்கத்தில் பா.ஜ., வாக்குறுதி

கொல்கட்டா: ''மேற்கு வங்கத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், மதுவா, நமசூத்ரா உள்ளிட்ட அகதி சமூகத்தினருக்கு, சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் குடி யுரிமை வழங்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும். சட்ட விரோத ஊடுருவல்காரர்களை நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்றுவோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நேரடி போட்டி மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 294 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

இதில், ஆளும் திரிணமுல் காங்., - எதிர்க்கட்சியான பா.ஜ., இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், புர்பா பர்தமான் மாவட்டத்தின் கட்வா என்ற இடத்தில் நேற்று நடந்த பா.ஜ., தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:

மேற்கு வங்கத்தின் மதுவா, நமசூத்ரா உள்ளிட்ட அகதி சமூகத்தினருக்கு நான் ஒரு உத்தரவாதம் அளிக்கிறேன்.

நீங்கள் இங்கு எந்தவொரு திரிணமுல் காங்., தலைவரின் தயவிலும் வாழவில்லை. நாட்டின் அரசியலமைப்பின் பாதுகாப்பில் தான் வசிக்கிறீர்கள்.

அகதி குடும்பங்களுக்கு குடியுரிமைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்கவே, சி.ஏ.ஏ., சட்டத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.

மேற்கு வங்கத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், குடியுரிமை வழங்கும் பணிகள் மின்னல் வேகத்தில் நடக்கும்.

மிகப்பெரிய சவாலான ஊடுருவலில் இருந்து மேற்கு வங்கத்தை பா.ஜ., பாதுகாக்கும். சட்ட விரோதமாக ஊடுருவியவர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவர். ஊடுருவல்காரர்களே மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொள்ளுங்கள். நீங்கள் வெளியேற வேண்டிய நேரமிது.

ஊடுருவல்காரர்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்தவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.

உத்தரவாதம் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், 15 ஆண்டு கால திரிணமுல் ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவோம்.

அக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-.,க்களின் முறைகேடுகளை மக்களுக்கு அ ம்பலப்படுத்துவோம்.

பா.ஜ., முதல்வர் பதவியேற்ற பின் நடக்கும் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே, 'ஆயுஷ்மான் பாரத்' காப்பீட்டு திட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப் படும்.

மேலும், பெண்களுக்கு மாதம், 3,000 ரூபாய் உதவித்தொகை உட்பட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளையும் உடனடியாக அமல்படுத்துவோம். இது மோடியின் உத்தரவாதம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement