சமூக ஊடங்களில் தவறான கருத்து ஹரியானா டி.ஜி.பி., எச்சரிக்கை
சண்டிகர்: “துப்பாக்கி கலாசாரம், சர்ச்சைக்குரிய மற்றும் தவறான கருத்துக்களை சமூக ஊடகங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, ஹரியானா டி.ஜி.பி., அஜய் சிங்கால் கூறியுள்ளார்.
ஹரியானா டி.ஜி.பி., அஜய் சிங்கால், நிருபர்களிடம் நேற்று கூறிய தாவது:
ஜனவரி 1 முதல் ஏப்ரல் 10ம் தேதி வரையிலான காலகட்டத்தில், ஆட்சேபனைக்குரிய, தவறான மற்றும் சட்டம் - -ஒழுங்கை பாதிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு இருந்த 6,083 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.
அதில், 4,278 பதிவுகள் மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸாப் ஆகிய சமூக ஊடகங்களில் இடம்பெற்றிருந்தன. யு-டியூப் சேனலில் 1,172, எக்ஸ் தளத்தில் 372, டெலிகிராமில் 53, ரெட்டிட்டில் 36, ஸ்நாப் சாட்டில் 5 இடம் பெற்றிருந்தன. இவை அனைத்தும் போலீஸ் துறையால் நீக்கப்பட்டு விட்டன.
துப்பாக்கி மற்றும் இதர ஆயுத கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையைத் துாண்டும் வகையிலும், பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வகையிலும் மற்றும் குழந்தைகள் மற்றும் சிறுமியரை கண்ணியமற்ற வகையிலும் கருத்துக்களை சமூக ஊடங்களில் வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், ஹரியானா மாநில மக்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுவோருக்கும் கடும் தண்டனை வழங்கப்படும்.
இதுபோன்ற செயல்கள் சமூகத்தின் அமைதியை பாதிப்பது மட்டுமின்றி, நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கிறது.
ஹரியானா மக்கள் இயல்பாகவே அமைதியை விரும்புவர். கடின உழைப்பாளிகள். நாட்டை கட்டமைப்பதில் ஹரியானா மக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
ராணுவம், விவசாயம், பொருளாதாரத் துறை, வெண்மை மற்றும் பசுமைப் புரட்சி, தொழிற்துறை, சினிமா, இசை மற்றும் வர்த்தகம் என பல துறைகளிலும் ஹரியானா மக்கள் இடம் பெற்றுள்ளனர்.
எனவே, ஹரியானா மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பிரசாரமோ அல்லது தவறான கருத்தோ வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சமூக ஊடகங்களைப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும். சமூகத்தில் நேர்மறையான செய்திகளை பரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.