குதுப்மினார், மெஹ்ராலி சாலையில் வாகன போக்குவரத்து இன்று மாற்றம்
புதுடில்லி: குதுப் மினார் மற்றும் மெஹ்ராலி தொல்லியல் பூங்கா அருகே போக்குவரத்து நெரிசல் இன்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் போக்குவரத்து பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு:
குதுப் மினார் மற்றும் மெஹ்ராலி தொல்லியல் பூங்கா அருகே வாகனப் போக்குவரத்து இன்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, குதுப்மினார் மற்றும் மெஹ்ராலி தொல்லியல் பூங்கா ஆகியவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், வழித்தட மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
அனுவ்ரத் மார்க் வழியாக பூல் மண்டி சர்வீஸ் சாலை, கிரசன்ட் மார்க் மற்றும் மஸ்ஜித் ஹாஜி அலி ஜான் வழியாக குதுப்மினாருக்கு கனரக வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் செல்ல இன்று இரவு 9:00 மணி வரை அனுமதி கிடையாது.
அதேபோல், கல்கா தாஸ் மார்க் வழியாகவும் குதுப்மினார் செல்ல அனுமதி இல்லை. அனுவ்ரத் மார்க், கிரசன்ட் மார்க் மற்றும் கல்கா தாஸ் மார்க் உள்ளிட்ட இணைப்புச் சாலைகளில் கனரக மற்றும் வணிக வாகனங்களை நிறுத்துவதோ அல்லது பார்க்கிங் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறும் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு கடும் அபராதத்துடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அரவிந்தர் மார்க், அனுவ்ரத் மார்க், கிரசன்ட் ரோடு மற்றும் கல்கா தாஸ் மார்க் உள்ளிட்ட அனைத்து முக்கியச் சாலைகளில் இதர வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம். ஆனாலும், குதுப்மினாருக்கு கல்கா தாஸ் மார்க் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும்.
மெஹ்ராலி கல்கா தாஸ் மார்க்கில், அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். ஆம்புலன்ஸ், தீயணைப்பு மற்றும் போலீஸ் வாகனங்களுக்கு எந்தக் கட்டுப் பாடும் கிடையாது.
விமான நிலையம், புதுடில்லி ரயில் நிலையம் மற்றும் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களுக்குச் செல்வோர் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப் படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.