திருக்கழுக்குன்றத்தில் நாயன்மார்கள் உத்சவம் அதிருப்தி தேர்தல் நாள் என போலீசார் அனுமதி மறுப்பு?
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவில், ஏப்.23ல், 63 நாயன்மார்கள் கிரிவல உத்சவம் நடக்கவுள்ளது. சட்டசபை தேர்தலும் அன்று நடக்கவுள்ளதால், போலீசார் அனுமதி மறுத்து, வேறு நாளில் நடத்த அறிவுறுத்தினர்.
பாரம்பரியமாக நடத்தப்படும் நாளை மாற்றி அமைக்காமல் அதே நாளில் நடத்த, கோவில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. போலீசாரின் இச்செயலால் பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர். திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் சிவபெருமான் திருவடியில் வீற்றிருக்க, நான்கு வேதங்கள் வரம்பெற்று, இங்கு மலைக்குன்றுகளாக வீற்றுள்ளன. அதர்வண குன்றில், சிவபெருமான் சுயம்புலிங்கமாக உருவாகியுள்ளார்.
தரிசனம் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் அமைத்த கோவிலில், வேதகிரீஸ்வரர் வீற்று அருள் பாலிக்கிறார். அம்பாள் திரிபுரசுந்தரி அம்மன் தென்மேற்கில், தரைப்பகுதியில் அமைந்துள்ள, பக்தவச்சலேஸ்வரர் கோவிலில் வீற்று அருள்பாலிக்கிறார்.
பவுர்ணமி நாளில், பக்தர்கள், வேதமலை குன்றுகளை சுற்றி கிரிவலம் சென்று, சுவாமியை தரிசிக்கின்றனர். சித்திரை மாதம், கோவிலில், 10 நாட்கள் பெருவிழா உத்சவம் நடத்தப் படுகிறது.
பெருவிழா முதல் நாளில் கொடியேற்றப்பட்டு அன்று இரவு பஞ்சமூர்த்தி சுவாமியர் வீதிகளில் உலா சென்று அருள்பாலிப்பர்.
அதைத்தொடர்ந்து, தினமும் காலை, இரவு என, 10 நாட்கள், உபயதாரர்கள் மூலம், விமரிசையாக உத்சவங்கள் நடத்தப்படும். அறுபத்து மூன்று நாயன்மார்கள், மூன்றாம் நாளில் கிரிவலம் செல்வது குறிப்பிடத்தக்கது.
கிரிவலம் இந்தாண்டு சித்திரை பெருவிழா, வரும் 21ம் தேதி துவக்கப்பட்டு, நாயன்மார்கள் கிரிவலம் வரும் 23ம் தேதி நடக்க உள்ளது. அதே நாளில் சட்டசபை தேர்தலும் நடக்கவுள்ளது.
வழக்கமாக, நாயன்மார்கள், அபிஷேகம், அலங்காரம் ஆகியவற்றை தொடர்ந்து, காலை 8:00 மணிக்கு பின், கோவிலில் இருந்து புறப் படுவர்.
வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் செல்லும் வேதகிரீஸ்வரர், பிற சுவாமியரை தரிசித்தவாறு, நாயன்மார்கள் கிரிவலம் செல்வர். பக்தர்கள் கிரிவல பாதையில் கடந்து வழிபடுவர்.
பாதுகாப்பு இந்த உத்சவம், தேர்தல் நாளில் நடக்கவுள்ள நிலையில், கோவில் நிர்வாகத்தினர், பாதுகாப்பு கோரி, திருக்கழுக்குன்றம் போலீசாரிடம் வலியுறுத்தினர். ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில், சுவாமியர் கிரிவலம் நடப்பதாக கூறி, பாதுகாப்பு அளிக்க மறுத்து, உத்சவத்தை வேறு நாளில் நடத்த போலீசார் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையறிந்த ஆன்மிக ஆர்வலர்கள் கலெக்டர் மாலதி ெஹலனிடம் முறையிட்டபோது உத்சவம் நடத்துவது குறித்து, தேர்தல் ஆணையமே முடிவெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இச்சூழலில், நேற்று, கோவில் செயல் அலுவலர் வெங்கடேசன், உபயதாரர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
நாயன்மார்கள் உத்சவத்தை, அதிகாலை 3:00 மணிக்கே தொடங்கி, காலை 6:00 மணிக்குள், கோவிலுக்கு திரும்பி வருவது குறித்து, உபயதாரர்களிடம் ஆலோசித்தோம்.
சித்திரை பெருவிழா தொடர்பாக, இதர துறையினரின் ஒருங்கிணைப்பு குறித்து முடிவெடுக்க, நாளை 13ம் தேதி செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் ஆலோசனை நடத்துகிறார்.
அதன் பின்னரே நாயன்மார்கள் உத்சவம் நடத்துவது குறித்து, அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.