அதிவேகத்தால் நடந்த விபத்து; டிரைவர், கண்டக்டருக்கு கம்பி

கோவை: பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோ மீது மல்லிகா டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் பஸ் மோதிய விபத்தில், அதிவேகமாக பஸ்சை இயக்கிய ஓட்டுனர் மற்றும் நடத்துனரை போலீசார் சிறையில் அடைத்தனர்.


கோவையில், இரு தினங்களுக்கு முன், பள்ளி குழந்தைகளுடன் வந்த ஆட்டோ மீது போத்தனூரில் இருந்து சிந்தாமணி புதூருக்கு சென்ற மல்லிகா டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு சொந்தமான 8ஏ பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. விசாரணையில், தனியார் பஸ்களுக்கு இடையே வசூல் போட்டியில், அதிவேகமாக பஸ்சை இயக்கியது தெரியவந்தது.


வழக்கமாக, உயிரிழப்பு ஏற்படுத்திய விபத்துக்களில் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவது வழக்கம். இதுபோன்ற விபத்துக்களில் பெரும்பாலும் அபராதம் மட்டுமே வசூலிக்கப்படும்.


இம்முறை, காயம் மட்டுமே ஏற்பட்ட வழக்கில், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விபத்துக்கு ஓட்டுனர், நடத்துனர் சிறையில் அடைக்கப்பட்டது கோவையில் இதுவே முதன்முறை.


போலீசார் கூறுகையில், 'இதுபோன்ற அஜாக்கிரதையாக பொது பயன்பாட்டு வாகனங்களை அதிவேகமாக ஓட்டுபவர்கள், அபராதம் செலுத்திவிட்டு தப்பிவிடலாம் என, நினைக்கின்றனர். அலட்சியம் இருந்தால் கடும் நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட பஸ் நிறுவனங்களும் உள்ளாக நேரிடும்' என்றனர்.

Advertisement