116 வேட்பாளர்களில் 21 பெண்கள் மட்டுமே; மேடை முழக்கம் வெறும் கோஷம்

திருப்பூர்: பெண்களின் வாக்குகள் மீது குறிவைக்கும் கட்சிகள், பெண் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு மட்டும் தயங்குகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 8 சட்டசபை தொகுதிகளில், களம் காணும் 116 வேட்பாளர்களில், 21 பேர் பெண்கள்; இது, 17 சதவீதம் மட்டுமே.

இதில், பிரதான கட்சிகள் சார்பில் களத்தில் நிற்கும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை, 9 பேர் மட்டுமே. குறிப்பாக, பல்லடம் போன்ற முக்கியத் தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளர் கூட இல்லை. 'பெண்களால் முடியும்' என்பது தேர்தல் அறிக்கைகளுக்கான கவர்ச்சி வாசகமாக மட்டும் இல்லாமல், வேட்பாளர் தேர்விலும் பிரதிபலித்தால் மட்டுமே நிஜமான மாற்றம் சாத்தியமாகும்.

* மாவட்டத்தில் அதிகபட்சம் திருப்பூர் தெற்கு தொகுதியில், 24 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இதில் பெண் வேட்பாளர்களை பொறுத்தவரை, இந்து திராவிட மக்கள் கட்சி சார்பில் மலர்விழி; சுயேட்சை வேட்பாளராக, வசந்தாமணி, கார்த்திகாதேவி ஆகியோர் களத்தில் உள்ளனர்.* திருப்பூர் வடக்கு தொகுதியில் களத்தில் உள்ள, 15 வேட்பாளர்களில் அபிநயா (நாம் தமிழர்), சத்தியபாமா (த.வெ.க.) என இருவர் களத்தில் உள்ளனர்.* அவிநாசி தொகுதியில், கோகிலாமணி (தி.மு.க.), மேனகா (நாம் தமிழர்), கமலி (த.வெ.க.) உட்பட ஆனந்தி, கோகிலாமணி என, 5 பெண்கள் களத்தில் உள்ளனர். * தாராபுரம் தொகுதியில், களத்தில் உள்ள 9 வேட்பாளர்களில், இந்திராணி (தி.மு.க), சத்தியபாமா (அ.தி.மு.க.), திவ்யா (நாம் தமிழர்), கவுரிசித்ரா (த.வெ.க) மற்றும் சுயே.,களாக ஆனந்தி, இந்திராணி, கவுரி, ரோகிணி என 8 பேர் களத்தில் உள்ளனர்.* காங்கயம் தொகுதியில், 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், விஜயலட்சுமி (இந்திய கண சங்கம்) என்ற ஒரு பெண் வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளார்.*பல்லடம் தொகுதியிலும், 15 வேட்பாளர்களில் ஒருவர் கூட பெண் வேட்பாளர்கள் இல்லை.* உடுமலை தொகுதியில், களத்தில் உள்ள, 11 வேட்பாளர்களில், எல்சி என்ற சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மட்டுமே பெண். மடத்துக்குளம் தொகுதியில், களம் காணும், 13 வேட்பாளர்களில் ராதாமணி (நாம் தமிழர்) ஒருவர் மட்டுமே பெண்.இதில், தி.மு.க. அ.தி.மு.க. நாம் தமிழர், த.வெ.க. என கவனம் பெற்ற கட்சிகள் சார்பில் களம் காணும் பெண் வேட்பாளர்கள், 9 பேர் மட்டுமே.



பிரதானக் கட்சிகளின் பெண் வேட்பாளர்கள்



காங்கயம்: இந்திராணி(தி.மு.க.), சத்தியபாமா(அ.தி.மு.க.), கவுரிசித்ரா(த.வெ.க), திவ்யா(நாம் தமிழர்);

திருப்பூர் வடக்கு: சத்தியபாமா(த.வெ.க.), அபிநயா(நாம் தமிழர்), அவிநாசி: கோகிலாமணி(தி.மு.க.), கமலி(த.வெ.க.), மேனகா(நாம் தமிழர்); மடத்துக்குளம்: ராதாமணி(நாம் தமிழர்)

@block_B@ கட்சிகளின் இரட்டை வேடம் அரசியல் மேடைகளில் 'பெண்கள் நாட்டின் கண்கள்', 'சட்டமன்றத்தில் சரிபாதி உரிமை' என அடுக்குமொழி வசனங்களுக்குக் குறைவே இல்லை. ஆனால், சீட் ஒதுக்கும் என்று வரும்போது மட்டும் அந்தப் பாசம் ஏனோ கசந்து விடுகிறது. திருப்பூர் மாவட்டத்தின் தேர்தல் புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே கட்சிகளின் இந்த 'இரட்டை வேடம்' அப்பட்டமாகத் தெரிகிறது. மொத்தம் உள்ள 8 தொகுதிகளில் பல்லடம் போன்ற பகுதிகளில் ஒரு பெண்ணுக்குக்கூட வாய்ப்பளிக்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை. ஓரளவு ஆறுதல் தருகிறது, தாராபுரம் தொகுதி. இங்கு பிரதானக்கட்சி வேட்பாளர்கள் உள்பட 8 பேர் பெண்களாக உள்ளனர். நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை, எட்டு தொகுதிகளில், சரிபாதியளவுக்கு அதாவது 4 வேட்பாளர்களை பெண்களாக களம் இறக்கியுள்ளது. 116 வேட்பாளர்கள் கொண்ட களத்தில், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே முக்கியக் கட்சிகள் பெண்களை முன்னிறுத்தியுள்ளன. பெண்களை வெறும் 'வாக்கு வங்கி'யாக மட்டுமே பார்க்கும் கட்சிகள், அவர்களை 'சட்டமன்ற அங்கீகாரம்' மிக்கவர்களாக மாற்ற இன்னும் மனமுவந்து முன்வரவில்லை என்பதையே இந்த 17 சதவீதப் பிரதிநிதித்துவம் காட்டுகிறது. உரிமைக் குரல்கள் ஓங்கி ஒலிக்கும் இதே மண்ணில், அதிகாரப் பகிர்வில் மட்டும் பெண்களுக்கான இடைவெளி இன்னும் குறையாமலேயே இருப்பதுதான் பெரும் முரண்!block_B

Advertisement