கண்டனுார்-மாத்துார் சாலையில் விபத்து அபாயத்தால் அச்சம்
காரைக்குடி: கண்டனுார் பேரூராட்சியில் இருந்து மாத்துார் செல்லும் சாலையில் சேதப்படுத்தப்பட்ட சாலையில் மலை போல் குவிந்துள்ள மண்ணால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் நிலவி வருகிறது.
கண்டனுார் பேரூராட்சியில் இருந்து மாத்தூர், இலுப்பக்குடி, காரைக்குடி, தேவகோட்டை செல்லும் சாலையாக மாத்துார் - கண்டனுார் சாலை உள்ளது.
வேலைக்கு, பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக சாலை போடப்பட்டது. ஆனால் சாலை போட்ட சில மாதங்களிலேயே குடிநீர் பணிக்காக சாலை முழுவதும் பல இடங்களில் தோண்டப்பட்டு சேதமடைந்து கிடக்கிறது.
இதனால் பாதிச்சாலை மண்சாலையாக காட்சியளிக்கிறது. தவிர சாலையில் குவித்து வைக்கப்பட்டுள்ள மணலால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் நிலவி வருகிறது.