சிலிண்டர், குக்கர், பச்சை மிளகாய்: ராமதாஸ் தரப்புக்கு 6 சின்னங்கள்

ராமதாஸ் அறிவித்துள்ள 35 வேட்பாளர்களுக்கும் ஒரே சின்னம் கிடைக்காத நிலையில், 'சிலிண்டர், குக்கர், பச்சை மிளகாய்' உள்ளிட்ட ஆறு சின்னங்களில் போட்டியிடுகின்றனர்.

பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, 18 தொகுதிகளில் போட்டியிடுகிறார். சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள ராமதாஸ், அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் என்ற பெயரில், 35 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.

அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிடும் தர்மபுரி, சேலம் மேற்கு, விக்கிரவாண்டி, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், போளூர், ஜெயங்கொண்டம், செஞ்சி, கீழ்வேளூர் உட்பட, 30 தொகுதிகளில், ராமதாஸ் அறிவித்த வேட்பாளர்கள், 'சிலிண்டர்' சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

சோளிங்கரில் 'தர்பூசணி', அணைக்கட்டில் 'பச்சை மிளகாய்', நெல்லையில் 'கிரிக்கெட் பேட்', பரமத்தி வேலுாரில் 'பேபி வாக்கர்', திண்டுக்கல் ஆத்துாரில், 'பிரஷர் குக்கர்' ஆகிய சின்னங்கள், ராமதாஸ் தரப்பு வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

அன்புமணி பா.ம.க., போட்டியிடும் 18 தொகுதிகளில், 11ல், ராமதாஸ் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தார். ஆனால், பா.ம.க., செய்தித் தொடர்பாளர் பாலு போட்டியிடும் திருப்போரூரில், ராமதாஸ் தரப்பு வேட்பாளர் பொற்செழியன் வேட்புமனுவை திரும்பப் பெற்றார். உத்திரமேரூர் தொகுதியில், ராமதாஸ் வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்புமணியுடன் ஒன்பது தொகுதிகளில், ராமதாஸ் நேருக்கு நேர் மோதுகிறார்.

Advertisement