முதியவர், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலேயே ஓட்டுப்பதிவு

திருப்பூர்: மூத்த, மாற்றுத்திறனாளி வாக்காளர் வீடு தேடிச் சென்று, ஓட்டுப்பதிவு செய்து பெறும் பணிகள் நாளை முதல் துவங்குகின்றன. எட்டு தொகுதிகளிலும், 'ஹோம் வோட்டிங்' பணிகளுக்காக 156 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலில், மூத்த வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், வீட்டிலேயே ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 3ம் தேதி வரை, மொத்தம் 5,382 மூத்த வாக்காளர்; 1,440 மாற்றுத்திறனாளி வாக்காளர், வீட்டிலேயே ஓட்டுப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்து, படிவம் 12 டி, பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர்.

வீடுவீடாக சென்று ஓட்டுப்பதிவு செய்து பெறும் பணிகளுக்காக, தொகுதிவாரியாக, ஓட்டுப்பதிவு அலுவலர் தலைமையில், நுண்பார்வையாளர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் தொகுதிக்கு 24, காங்கயம் - 20, அவிநாசி - 24, திருப்பூர் வடக்கு - 8, திருப்பூர் தெற்கு - 10, பல்லடம் - 19, உடுமலை - 27, மடத்துக்குளம் - 14 என, மொத்தம் 156 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர், நாளை முதல் (12ம் தேதி முதல்), 14ம் தேதி வரை, மூத்த மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளரின் வீடு தேடிச் சென்று, ஓட்டுப்பதிவு செய்யும் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

Advertisement