தி.மு.க., தேர்தல் அறிக்கைதான் 'சூப்பர் ஸ்டார்' அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., பெருமிதம்

கரூர் :''தேர்தல் களத்தில் தி.மு.க.,தேர்தல் அறிக்கை, 'சூப்பர் ஸ்டாராக' உள்ளது,'' என, அரவக்
குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ தெரிவித்தார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி, க.பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட தென்னிலை பஞ்சாயத்தில், பேரக்காபாளையம், கூனம்பட்டி, புளியம்பட்டி, எம்.ஜி.ஆர். நகர், குள்ளம்பாளையம், குள்ளம்பாளையம் குடியிருப்பு, ஆவுத்திபாளையம், எல்லைமேடு, பாலாகாட்டூர், தோப்பூர், ஆத்திக்காட்டூர், சின்ன தோட்டம், சின்னவாங்கலாம்பாளையம், வேலாயுதம்பாளையம், கட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் தி.மு.க., வேட்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான இளங்கோ தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று ஈடுபட்டார்.

அப்போது, அவர் பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், அரவக்குறிச்சி தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை வழங்கி உள்ளார். அதன்படி, கருர் - கோவை தேசிய நெடுஞ்சாலை, 135 கோடி மதிப்பில் விரிவாக்கம், தென்னிலையில் திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி கிளை துவங்கப்பட்டது, 250 கோடி ரூபாய் மதிப்பில், 54 பஞ்சாயத்தில் உள்ள மண் சாலைகள் மேம்படுத்தபட்டு தார்ச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை மேம்பாட்டு நிதி மூலம் தொப்பம்பட்டியில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளது. விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான அஞ்சூர் மற்றும் சின்னதாராபுரம் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது.
சின்னதாராபுரம், பரமத்தி, அஞ்சூர், குப்பகவுண்டன்வலசு, காசிபாளையம், தென்னிலை, பெரிய மஞ்சுவெளி, கோவிலுார், மண்மாரி, கோட்டப்பட்டி, நந்தனுார், பண்ணபட்டி, ஈசனத்தம், ஓந்தாம்பட்டி ஆகிய பகுதிகளில் துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு பகுதியில் அங்கன்வாடி மையங்கள், சிமென்ட் சாலை, குடிநீர் வசதி, தானியகளங்கள் வசதி ஏற்படுத்தபட்டுள்ளது. தென்னிலை மேற்கு மற்றும் கிழக்கு பஞ்.,க்கு உட்பட்ட தொகுதி முழுவதும் பொது மக்களுக்கு தேவையான, பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி மூலமும் செய்து கொடுத்துள்ளேன்.
தேர்தல் களத்தில் தி.மு.க., தேர்தல் அறிக்கை, 'சூப்பர் ஸ்டாராக' உள்ளது. அதில், நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு, 3,500 ரூபாய், கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு, 4,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை ரூ. 1,200-லிருந்து ரூ. 2,000 ஆகவும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, 1,500-லிருந்து. 2,500 ஆகவும் உயர்த்தப்படும். வீட்டு உபயோக பொருட்கள் வாங்க இல்லத்தரசிகளுக்கு, 8,000 ரூபாய் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும்.
இல்லத்தரசிகள் கூப்பனை பயன்படுத்தி வாஷிங் மெஷின், டிவி, பிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோக பொருட்களை, புதிதாக வாங்கிக் கொள்ளலாம் அல்லது ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களுக்கு மாற்றாகவும் பெற்றுக் கொள்ளலாம் ஆகிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. தி.மு.க., ஆட்சியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக கொண்டு வரப்பட்டுள்ளது. 7வது முறையாக தி.மு.க., ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு, அவர் பேசினார். -
பிரசாரத்தில் போது, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement