ஜாதிய உணர்வு பரவுவதற்கான தளமாக - கோயில் திருவிழாக்கள் அமையக்கூடாது உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
மதுரை:கோயில் திருவிழாக்கள் ஜாதிய உணர்வு பெருகி பரவுவதற்கான தளமாக அமையக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சண்முகம் பல்லவராயர், லக்ஷ்மணன் நாட்டார் உள்ளிட்ட 11 பேர் தாக்கல் செய்த மனு:
நார்த்தமலை முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா அழைப்பிதழில் பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை, மரபுகளின்படி மண்டகப்படி மற்றும் மண்டகப்படிதாரர்களின் பெயர்களை குறிப்பிட அறநிலையத்துறை இணை கமிஷனர், உதவி கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.
நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு:
அழைப்பிதழில் மனுதாரர்களின் பெயர்களுடன் அவர்களது 'பட்டப்பெயரையும்' அச்சிட வேண்டும் என்கின்றனர். 'பட்டப்பெயர்' என்பது ஏதேனும் ஒரு 'பட்டம்' (பதவிப் பெயர்) அல்ல; மாறாக, அது ஒரு ஜாதியின் பெயராகும். ஜாதி என்பது உண்மையில் இல்லாத ஒரு கற்பிதமே. அது மக்களின் மனங்களிலும், நடைமுறையில் உள்ள சமூக அமைப்பிலும் மட்டுமே நிலவுகிறது. இத்தகைய நடைமுறை அரசியலமைப்பு சட்டத்தின் சமத்துவ கோட்பாடுகளுக்கு முரணானது. கோயில் திருவிழாக்கள் என்பவை ஜாதிய உணர்வு பெருகி பரவுவதற்கான தளமாக ஒருபோதும் அமையக்கூடாது.
சமத்துவ சமூகத்தை வளர்த்தெடுப்பது, ஜாதிய வேறுபாடுகளை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதுமே அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை நோக்கம்.
நிலைமை இவ்வாறு இருக்கையில், ஜாதி பெயரை சேர்க்குமாறு மனுதாரர்கள் விடுக்கும் கோரிக்கையை ஏற்க இயலாது. வேறு சில நபர்களை பொறுத்தவரை, ஜாதியை குறிக்கும் வகையிலான பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர். வரும் காலங்களில் அத்தகைய நடைமுறையை மேற்கொள்ளக்கூடாது.
ஒருவரின் பிறப்பின் அடிப்படையில், அவரை பிறரது ஆடைகளை சலவை செய்யும் பணியில் ஈடுபடுத்துவதென்பதே மனித உரிமை கோட்பாடுகளுக்கு முரணானது. இச்செயலை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏன், அழைப்பிதழ்களில்கூட அங்கீகரிக்கக்கூடாது.
மனுதாரர்களின் கோரிக்கை பொதுக் கொள்கைக்கு முரணானது. அரசியலமைப்பிற்கு எதிரானது. அழைப்பிதழில் பொதுவான முறையில் மண்டகப்படிக்கு நிதியுதவி அளிப்பவர்களோ அல்லது அதனை நடத்துபவர்களோ 'ஊர்க்காரர்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். இது நியாயமாக, சரியானதாக உள்ளது. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.
மேலும்
-
தேர்தலுக்கு 10 நாட்கள் தான்; அனல் பறக்கும் கள தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
இல்லாததை பேச வேண்டிய அவசியமில்லை: முதல்வர் ஸ்டாலின் பதில்
-
தி.மு.க., எம்.எல்.ஏ., ஆபாச பேச்சு
-
கைவிட்ட எம்.எல்.ஏ., அமைச்சர்; கருப்பு கொடி ஏற்றிய நெசவாளர்கள்
-
ஜோசப் விஜய்- - உதயநிதிக்கு முதல்வராக தகுதி இல்லை
-
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிரசாரத்தில் திடீர் மயக்கம்