நெல் சேமிப்பு கிடங்கு இல்லாததால் கரும்பாக்கம் விவசாயிகள் அவதி

உத்திரமேரூர்:கரும்பாக்கத்தில் நெல் கொள்முதல் நிலையம் இயங்கும் பகுதியில் சேமிப்பு கிடங்கு இல்லாததால் மழை நேரங்களில் விவசாயிகள் நெல் மூட்டைகளை பாதுகாப்பதில் சிரமப்படுகின்றனர்.

உத்திரமேரூர் ஒன்றியம், கரும்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பாலாற்று பாசனம் மற்றும் ஆழ்த்துளை கிணற்று பாசனம் வாயிலாக சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவங்களுக்கும் அதிக அளவில் நெல் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

இப்பகுதிகளில், அறுவடை செய்த நெல் மூட்டைகளை கரும்பாக்கத்தில் இயங்கும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையித்திற்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.

இங்குள்ள நெல் கொள்முதல் நிலையம் திறந்தவெளியில் இயங்குவதால், அறுவடை காலங்களில், விவசாயிகள் கொண்டு வந்து குவிக்கும் நெல், போதிய பாதுகாப்பின்றி உள்ளது.

ஏப்ரல், மே மாதங்களின் போது கோடை மழை காரணமாக நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகின்றன.

இதுகுறித்து, கரும்பாக்கம் விவசாயிகள் கூறியதாவது:

பணம் செலவிழத்து, கஷ்டப்பட்டு சாகுபடி செய்த நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில், விற்பனை செய்ய வைக்கிறோம். அச்சமயம், திடீர் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து நஷ்டத்தை சந்திக்கறோம்.

எனவே, அறுவடை செய்த நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைத்திருந்து விற்பனை செய்ய இப்பகுதியில் நெல் சேமிப்பு கிடங்கு ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement