திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோற்சவம் துவங்கியது
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து வருகிறது. அந்த வகையில், காலை 6:30 மணிக்கு, நடப்பாண்டிற்கான சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஏப்ரல் 20 இரவு விநாயகர் வீதியுலா மற்றும் யாகசாலை பூஜையுடன் துவங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் கேடய வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் 27ம் தேதி தேர் திருவிழா, வரும் 28ம் தேதி தெய்வானை திருக்கல்யாணம், 30ம் தேதி தீர்த்தவாரி சண்முக சுவாமி உத்சவத்துடன் பிரம்மோத்சவ விழா நிறைவுபெறுகிறது.
ஏப்ரல் 22 முதல், வரும் 28ம் தேதி வரை காலை மற்றும் இரவு நேரத்தில் உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் சூர்ய பிரபை, பூதம், சிம்மம், ஆட்டுக்கிடாய், பல்லக்கு, அன்னம், வெள்ளிமயில் வாகனம், புலி, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இதற்கான ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், கோவில் இணை ஆணையர் ரமணி ஆகியோர் செய்து வருகின்றனர்.