திருத்தணி தொகுதியில் வளர்ச்சி பணி தொடர மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைய வேண்டும் :தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் பிரசாரம்

திருத்தணி: “திருத்தணி தொகுதியில் வளர்ச்சி பணிகள் தொடர, மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைய வேண்டும்,” என, தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து, திருத்தணியில் பிரசாரம் மேற்கொண்டார்.

திருத்தணி தொகுதியில் தி.மு.க., கூட்டணி சார்பில், தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். இவர் நேற்று, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பூபதி, நகர செயலர் வினோத்குமார் ஆகியோருடன், திருத்தணி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் ஓட்டு சேகரித்தார். அப்போது, வேட்பாளர் கிருஷ்ணமூர்த்திக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அப்போது, சந்திரன் பேசியதாவது:

திருத்தணி வட்டார அரசு மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தியும், அதற்கான கட்டடம் 45 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதேபோல், அரசு போக்குவரத்து பணிமனை அருகே, 21 கோடி ரூபாய் மதிப்பில், புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

முருகன் கோவிலில், 103 கோடி ரூபாயில் மாஸ்டர் பிளான் திட்டத்தில், பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு, துரித வேகத்தில் நடந்து வருகிறது. ஐந்தாண்டில், திருத்தணி தொகுதியில் மட்டும், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுபோன்ற வளர்ச்சி பணிகள் தொடருவதற்கு, தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்திக்கு முரசு சின்னத்திற்கு ஓட்டு போட்டு வெற்றி பெற செய்து, மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement