'எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க': வைரலாகிறது 'டேக்லைன்'

கோவை: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சட்டசபை தேர்தலின் இறுதி பிரசார நாளில், 'எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க' என்ற டேக்லைன், சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, நாளை நடக்கும் சட்டசபை தேர்தல். தி.மு.க., அ.தி.மு.க., என்ற இரு பெரும் கட்சிகளையும் கலக்கத்தில் வைத்திருக்கும் வகையில், த.வெ.க., நா.த. கட்சி வேட்பாளர்கள் இம்முறை களப்பணியில் தீவிரம் காட்டியுள்ளனர்.

படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் பலர் வேட்பாளர்களாக களமிறக்கி விடப்பட்டுள்ளனர். பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் விநியோகம் இருந்தாலும், இளம், நடுநிலை வேட்பாளர்களால் காட்சி மாறலாம் என்ற அச்சம், திராவிட கட்சிகளுக்கு இருக்கிறது.

இதை உறுதி செய்யும் வகையில், த.வெ.க., தலைவர் நடிகர் விஜய் மேடைதோறும் முழங்கும் வாக்கியமான, 'எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க' என்ற டேக்லைனை, அனைத்து கட்சி புதிய வேட்பாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ஒரு வாக்கியம், அரசியல் களத்தில் எப்படிப்பட்ட புரட்சியை கொண்டு வரப்போகிறது என்பது மே 4ல் தெரியவரும்.

Advertisement