நேரு மார்க்கெட்டில் வெளியேறும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாவதோடு சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம்:புதியதாக கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள ஜவகர்லால் நேரு மார்க்கெட்டில், பாதாாள சாக்கடை இணைப்பு இல்லாததால், திறந்த வெளியில் கழிவுநீர் வெளியேறி தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் நகரில் உள்ள ராஜாஜி மற்றும் ஜவகர்லால் நேரு ஆகிய இரு மார்க்கெட்டுகள், நகரவாசிகளுக்கு காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்கான பிரதான இடங்களாக விளங்குகின்றன.

இங்கு, ராஜாஜி மார்க்கெட் 7 கோடி ரூபாயிலும், ஜவகர்லால் நேரு மார்க்கெட் 4.6 கோடி ரூபாயிலும் புதிதாக கட்டி பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இதில், ஜவகர்லால் நேரு மார்க்கெட், கடந்தாண்டு மே மாதம், முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிஸ் வாயிலாக திறந்து வைத்தார். இந்த மார்க்கெட்டில் 80 கடைகள் உள்ளன. இங்குள்ள கடைகளுக்கு முறையாக பாதாள சாக்கடை இணைப்பு வழங்காமல் கடைகள் வழங்கப்பட்டிருப்பதால், கட்டடத்தின் பின்புறம் திறந்த வெளியில், கழிவுநீர் வெளியேறி தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாவதோடு, துர்நாற்றம் வீசுகிறது.

அதேபோல, மார்க்கெட் வியாபாரிகளுக்காக கட்டி கொடுக்கப்பட்ட கழிப்பறைக்கு தண்ணீர் வசதி இல்லை. கழிப்பறை குப்பை குளமாக மாறியதால், பலரும் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மார்க்கெட் திறந்து ஒராண்டிற்குள்ளாகவே பல பிரச்னைகள் எழுந்திருப்பதால், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகர மக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement