மதுரை தி.மு.க., பிரமுகர் வீட்டில் ஐ.டி., ரெய்டு
மதுரை:மதுரையில் நகர் தி.மு.க., பொதுக் குழு உறுப்பினர் ஆறுமுகம் வீடு, அவரது நிறுவனங்கள் உட்பட பல இடங்களில் வருமான வரித்துறையில் சோதனை செய்தனர்.
மதுரை கற்பகநகர் 11வது தெருவை சேர்ந்த இவர், விரகனுாரில் மதுரை ரெடி மிக்ஸ் நிறுவனம் வைத்துள்ளார். ரோடு உள்ளிட்ட ஒப்பந்த பணிகள், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தேர்தல் நேரம் என்பதால் இவர் கட்சிப் பணிகளிலும் தீவிரம் காட்டி வந்தார். அவரது வீடு அருகே உள்ள வடக்கு தொகுதிக்கான ஐ.டி., விங், வார் ரூம் பகுதிக்கும் சென்றுவந்தார். அப்பகுதியில் வாக்காளர்களுக்கு சிலர் பணம் கொடுக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் ஆறுமுகம் மீது ஏற்கனவே அளிக்கப்பட்ட வரி ஏய்ப்பு புகார்கள் அடிப்படையில் காலை 10:00 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். மற்றொரு குழு அவரது விரகனுார் நிறுவனத்திலும் சோதனை நடத்தியது. இரண்டு இடங்களிலும் சில ஆவணங்களை அதிகாரிகள் குழு கைப்பற்றினர்.