குமுளியில் கூடுதல் பஸ் வசதியின்றி ஐயப்ப பக்தர்கள், பயணிகள் அவதி

கூடலுார்:குமுளியிலிருந்து தமிழகப் பகுதிக்கு செல்ல மாலை, இரவில் கூடுதல் பஸ் வசதி இல்லாததால் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சபரிமலையில் சித்திரை விசு திருவிழாவிற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஐயப்ப பக்தர்கள் கூடுதலாக வருகின்றனர். தரிசனம் முடிந்து திரும்பும் போது குமுளியிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் பஸ் இயக்கப்படாததால் மாலை, இரவு நேரங்களில் ஐயப்ப பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இது தவிர தினமும் கூடலுார், கம்பம் பகுதியிலிருந்து கேரளாவில் உள்ள ஏலத் தோட்டத்திற்கு சென்று திம்பும் தொழிலாளர்களும் விவசாயிகளும் பஸ் வசதியின்றி காத்துக் கிடக்கின்றனர். தொலைதூரம் செல்லும் அரசு பஸ்களில் புறவழிச் சாலையில் செல்வதாகக்கூறி கூடலுார் பயணிகளை ஏற்ற மறுக்கின்றனர். இதனால் குமுளி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர். சித்திரை மாதம் முழுவதும் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் அதிகம் வருவதால் குமுளியில் இருந்து கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement