எந்தெந்த தடங்களில் சிற்றுந்து தேவை? மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு

சென்னை: சென்னையில் எந்தெந்த தடங்களில் சிற்றுந்துகள் தேவை என்பது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் வகையில், மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தற்போது 146 சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.

இவற்றில், மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் 20 சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், பயணியரின் தேவை கருதி, மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 220 சிற்றுந்துகளை இயக்க டெண்டர் கோரப்பட உள்ளது.

இதற்காக, எந்தெந்த வழித்தடங்களில் சிற்றுந்துகள் தேவை என்பது குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

மெட்ரோ ரயில் சேவையின் பயன்களை பயணியர் அதிகளவில் உணர துவங்கி விட்டனர். இதனால், தினசரி பயணியரின் எண்ணிக்கையும் சராசரியாக நான்கு லட்சத்தை கடந்துள்ளது. பயணியரின் வருகை அதிகரிக்க, இணைப்பு வாகன வசதி என்பது முக்கியமானதாக இருக்கிறது.

எனவே, மாநகர போக்குவரத்து கழகத்துடன் இணைந்து, 220 'ஏசி' மினி பஸ்களை இயக்க உள்ளோம். பயணியரின் தேவை எங்கெல்லாம் இருக்கிறது என்பதை செயலி வாயிலாக ஆய்வு செய்து வருகிறோம்.

பயணியர் அதிகமாக வரும் வழித்தடங்களில் முன்னுரிமை அளித்து, முதல் கட்டமாக 'ஏசி' சிற்றுந்துகளின் இணைப்பு சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement