பெண்ணை வெட்டி உடலை கிணற்றில் வீசிய கொடூரம் * மூவரிடம் போலீஸ் விசாரணை

சிவகங்கை: சிவகங்கை அருகே கணவரை பிரிந்து தனியாக வசித்த பெண்ணை வெட்டி கொன்று உடலை கிணற்றில் வீசி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையில் சந்தேகத்தின் அடிப்படையில் மூவரிடம் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை அருகே சுந்தரநடப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மனைவி சுசீலா 42. இவர் காட்டு நெடுங்குளம் ஊராட்சியில் துாய்மை காவலராக பணிபுரிந்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுசீலா தனி வீட்டில் வசித்து வந்தார். இரு குழந்தைகளும் சுசீலா தங்கை வீட்டில் தங்கி படிக்கின்றனர். சுசீலா மாடு வளர்த்து அருகில் உள்ள வீடுகளுக்கு பால் விற்பனை செய்து வந்தார்.

காலை 7:00 மணி வரை கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு பால் ஊற்ற சுசீலா வராததால் சிலர் அவருக்கு போன் செய்தனர். போனை எடுக்காததால் அருகில் உள்ளவர்கள் சுசீலாவின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் கணேசன், எஸ்.ஐ.,க்கள் ஜெயபால், சக்திவேல் வீட்டை சோதனையிட்டனர். வீட்டின் அருகே உள்ள கிணற்றுக்கு செல்லும் பாதையில் ரத்தம் சிதறி கிடந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் மிதந்த சுசீலாவின் உடலை போலீசார் மீட்டனர். அவரது தலையில் வெட்டு காயம் இருந்தது. இக்கொலையில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் சந்தேகத்தின் அடிப்படையில் 3 நபர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement