காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி ஓட்டல்களில் உணவு விலை எகிறியது
புதுச்சேரி: அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால், புதுச்சேரியின் ஓட்டல்களை நிலைகுலையச் செய்துள்ளன.
நாடு முழுதும் நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்க மத்திய அரசு வணிக சிலிண்டர்களின் விநியோகத்தைக் குறைத்துள்ளது. இதனால் புதுச்சேரியில் போதிய சிலிண்டர்கள் கிடைக்காமல் பல சிறிய உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
திறந்து இருக்கும் சில உணவகங்களும் எரிவாயுவைச் சிக்கனப்படுத்த விசித்திரமான முறைகளைக் கையாளுகின்றன. குறிப்பாக, வாடிக்கையாளர்கள் கேட்கும் நேரத்தில் உடனுக்குடன் சமைத்துத் தரும் முறையைக் கைவிட்டு, ஒரே நேரத்தில் மொத்தமாகச் சமைத்து வைத்து விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் தோசை, கிரில்டு சிக்கன் போன்ற அடிக்கடி அடுப்பை எரிக்க வேண்டிய உணவு வகைகளுக்குப் பல இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. காஸ் தட்டுப்பாட்டால் மீண்டும் விறகு அடுப்புகளுக்கு உணவகங்கள் மாறி வருகின்றன. விறகுக்கான தேவை அதிகரித்ததால் அதன் விலையும் தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது.
கிடுகிடு
சிலிண்டர் மற்றும் விறகின் விலை உயர்வைக் காரணம் காட்டி, உணவகங்களில் விலைப் பட்டியல் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இது நடுத்தர வர்க்கத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிற்றுண்டி: : ரூ. 30க்கு விற்கப்பட்ட பூரி மற்றும் பொங்கல் தற்போது 40க்கும், ரூ. 6க்கு விற்கப்பட்ட இட்லி, வடை 10 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
மதிய உணவு:: பிரியாணி சராசரியாக ரூ. 100க்கும், முழுச் சாப்பாடு ரூ. 150க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பானங்கள்:: டீ ரூ. 20க்கும், காபி ரூ. 30க்கும் விற்கப்படுவதால் தினசரி கூலி வேலை செய்பவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் அவதி: கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், புதுச்சேரியின் பிரதான சுற்றுலா இடமான ஒயிட் டவுன் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர். முன்னணி உணவகங்களில் நிலவும் தட்டுப்பாடு மற்றும் கட்டுப்பாடுகளால், அவர்கள் சாலையோர உணவகங்களை நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கேயும் விலை உயர்வு நீடிப்பதால், சுற்றுலாப் பயணிகளின் பட்ஜெட் எகிறியுள்ளது.
போர் நின்றால் விலை குறையுமா என்பதே இப்போது அனைவரது கேள்வியாக உள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், ஒருமுறை உயர்த்தப்பட்ட உணவு விலையை ஓட்டல் உரிமையாளர்கள் மீண்டும் குறைப்பது அரிதான ஒன்றே. இதனால், அரசு தலையிட்டு சிலிண்டர் விநியோகத்தைச் சீர்செய்து, உணவு விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும்
-
அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வலியுறுத்தல்
-
தி.மு.க.,வுக்கு பெண்கள் அமோக ஆதரவு: வால்பாறை தி.மு.க., வேட்பாளர் பெருமிதம்
-
பொரியல் தட்டை விலை உயர்வு
-
பைக்கில் சென்ற பெண்ணிடம் ஒரு சவரன் தங்க சங்கிலி பறிப்பு
-
மீண்டும் பஸ்கள் இயக்கக் கோரி துடியலுார் ஆர்.டி.ஓ., முற்றுகை
-
துணை ராணுவ படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு