தி.மு.க., வியூகம் - ஏமாறும் பழனிசாமி

28

- நமது நிருபர் -

அரண்மனை எனும் திரைப்படத்தில், ஒரு காட்சி வரும். அதில், திருட வந்த வேலையை மறந்து, நடிகரும் அவரது நண்பர்களும், சமையல் வேலை செய்வர். அப்படிப்பட்ட காட்சிகள் தான் பழனிசாமி பிரசாரத்தில் அரங்கேறி வருகின்றன. எதிரி யாரென்றே தெரியாமல், வாரிசை வளர்த்துவிடும் வேலையை செய்துகொண்டு இருக்கிறார் பழனிசாமி. இதன் வாயிலாக, தி.மு.க., விரித்த வலையில் பழனிசாமி சிக்கிவிட்டார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

தேர்தல் களத்தில், யார் நம் எதிரி என்பதை, ஒரு கட்சி தலைவர் தன் தொண்டர்களுக்கு அடையாளப்படுத்த வேண்டும். அதற்காக தான், மறைந்த கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒருவருக்கு ஒருவர் விமர்சித்து பேசுவர். அவசியம் இருந்தால் மட்டும் தான், அடுத்த இடத்தில் இருப்பவர்களையும் சீண்டுவர்.

ஆனால், அதை தொடர்ந்து செய்யமாட்டார்கள். தங்கள் போட்டியாளரை மட்டும் விமர்சிப்பதன் வாயிலாக தான், 'ஒன் டு ஒன்' போட்டியை உருவாக்க முடியும்.

தே.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்ற முறையில், தி.மு.க., கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலினை தவிர, பழனிசாமி யாரையுமே பெரிதாக கண்டுகொள்ளக் கூடாது. ஸ்டாலினை மையமாக வைத்தும், அவரது ஆட்சியை மையமாக வைத்தும் பேசினால் தான், பழனிசாமியும் முதல்வர் வேட்பாளர் என்ற வரைபடம் வாக்காளர் மனதில் ஏறும்.

இதை சரியாக புரிந்து கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், பழனிசாமியை தவிர யாரையுமே இதுவரை விமர்சிக்கவில்லை. த.வெ.க., தலைவர் விஜய், தொடர்ந்து ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தாலும், அவருக்கு ஒருமுறை கூட, ஸ்டாலின் பதில் கொடுக்காமல் இருக்கிறார்.

தப்பித்தவறி, விஜய்க்கு ஸ்டாலின் பதிலளித்து விட்டால், த.வெ.க., பலம் பெற்றுவிடும். அதேபோல தான், நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமானின் விமர்சனத்துக்கு, இதுவரை யாருமே பதிலளிக்காமல் உள்ளனர்.

சீமான், விஜய் விஷயத்தில் சரியாக நடந்து கொள்ளும் பழனிசாமி, உதயநிதி விஷயத்தில் எப்போதுமே கோட்டை விடுகிறார். அதனால், உதயநிதியை தனக்கு போட்டியாக கருதுகிறார் என்ற பிம்பம் வளர்ந்துகொண்டே இருக்கிறது.

சசிகலா காலில் பழனிசாமி விழுந்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு, 2019, 2021, 2024, 2026 என நான்கு தேர்தல்களாக உதயநிதி பிரசாரம் செய்து வருகிறார். சசிகலா காலில் பழனிசாமி விழுந்த விஷயத்தை, மக்களே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், ஒவ்வொரு முறையும் பழனிசாமி கொந்தளிக்கிறார். அவர் அப்படி கொந்தளிப்பதாலேயே உதயநிதியும் அதை திருப்பித் திருப்பி செய்கிறார். அதாவது தன்னை தாக்கும்படி பழனிசாமியை துாண்டுகிறார். பழனிசாமியும் அந்த வலையில் வீழ்கிறார்.

ஓயாத சண்டை




சமீபத்தில் இவர்களுக்கிடையே பிரசார கூட்டங்கள் வாயிலாக நடந்த சண்டை.

உதயநிதி: சசிகலா காலில் விழுந்து தான் பழனிசாமி முதல்வர் ஆனார்.

பழனிசாமி: பொறுப்பு கிடைக்கும்போது, ஆசி பெறுவது தவறா? நேற்று முளைத்த காளான் உதயநிதி, நம்மை விமர்சிக்கிறார்.

உதயநிதி: ஒருத்தரை திட்டும்போது கூட 'கால்' என்ற வார்த்தை வர மாதிரிதான் பழனிசாமி திட்டுகிறார். அவருக்கும் காலுக்கும் அவ்வளவு பொருத்தம்.

பழனிசாமி: 'பால்டாயில்' குடித்தது எல்லாம் 'பஞ்ச் டயலாக்' பேசுகிறது. அப்பவே மேலோகத்துக்கு போயிருக்கணும். இருந்து நம்ம உயிர வாங்கிக்கிட்டு இருக்குது.

உதயநிதி: நான் யார் உயிரையும் வாங்க மாட்டேன். நீங்க 100 வருஷத்துக்கு நல்லா இருந்து, அ.தி.மு.க., நிரந்தர பொதுச்செயலராக இருக்கணும். அப்பதான் நாங்க ஈசியா ஜெயிக்க முடியும். பழனிசாமி போல, காலில் விழுந்து பதவி வாங்கிய அனுபவம் எனக்கு இல்லை.

பழனிசாமி: அதிகாலை 2:00 மணிக்கு, யாரு காலை தேடி, 'இன்ஸ்டாவில் ரீ போஸ்ட்' பண்ணுன... மீண்டும் பழைய ஞாபகம் வந்து 'பால்டாயில்' குடிச்சா, உன் பாடி தாங்காது.

உதயநிதி: தொடர்ந்து அதையே சொல்வதால், இனி அவர் எடப்பாடி பழனிசாமி இல்லை; 'பால்டாயில்' பழனிசாமி.

பழனிசாமி: எந்த இடத்திலும், உதயநிதி பெயரை குறிப்பிட்டு, நான் எதுவும் சொல்லவில்லை. பொதுவாக, பால்டாயில் குடித்தவர்கள் எல்லாம், 'பஞ்ச் டயலாக்' பேசுகின்றனர் என்றேன். உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது. 'குற்றம் உள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும்'. நான் யார் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆனால், 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பதை, அவரே போட்டு உடைத்து விட்டார்.

இப்படி பழனிசாமியை சீண்டி, உதயநிதியை தாக்க வைப்பதும் தி.மு.க.,வின் ஒரு வியூகம் தான்.

வியூகம்




ஜெயலலிதா, கருணாநிதி என்று பெரும் தலைவர்கள் மறைந்த பின், அப்போது முதல்வராக இருந்த பழனிசாமியும் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலினும், பெரும் ஆளுமையாக மக்கள் மனதில் பதியவில்லை.

இதை தனக்கு சாதமாக்க நினைத்த நடிகர் ரஜினி, அரசியலுக்கு வர ஆயத்தமானார். அப்போது அவருடைய கணக்கு, தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது என்பது தான். இது மக்கள் மத்தியிலும் எடுபட்டது. அவர் அரசியலுக்கு வரவில்லை என்றாலும், அப்போதிருந்தே, ஸ்டாலினை பெரும் ஆளுமையாக தி.மு.க., கட்டமைத்தது.

அதன்படி தான், எவ்வித சூழலையும் அமைதியாக கையாளுவார்; கடுமையான வார்த்தைகளை பேச மாட்டார்; கனிவானவர்; எல்லாரையும் அரவணைத்து போவார் என, மூத்த நிர்வாகிகள் மூலமாகவும், கூட்டணி கட்சி தலைவர்களை வைத்தும், ஸ்டாலின் பிம்பத்தை கட்டமைத்தது தி.மு.க.

அதன் ஒரு பகுதியாக தான், தற்போதைய தேர்தலில், ஸ்டாலின் மீது பழனிசாமியை கவனம் செலுத்த விடாமல், தன் பக்கம் உதயநிதி திருப்புகிறார். இந்த உத்தியால், கடந்த தேர்தல்களில் தி.மு.க.,வுக்கு பலன் கிடைத்தது. ஸ்டாலினின் பிம்பமும் உடையாமல் இருந்தது.

தி.மு.க.,வின் இந்த உத்தி பற்றி அறியாத பழனிசாமி, தன் மொத்த சக்தியையும் உதயநிதிக்கு பதிலடி கொடுப்பதிலேயே செலவிடுகிறார். உதயநிதிக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து, அவரது 'கிசுகிசு' கதைகளை பழனிசாமி பேசுகிறார்.

அதை வெளிப்படையாக சொல்ல முடியாததால், பழனிசாமியின் பிரசாரம் எளிய மக்களை சென்றடையவில்லை. அதோடு, ஸ்டாலின் எதிர் பழனிசாமி என்று, பழனிசாமிக்கு இருக்க வேண்டிய தேர்தல் களம், பழனிசாமி எதிர் உதயநிதி என சுருங்கி விடுகிறது.

கடந்த 50 ஆண்டுகால தமிழக வரலாற்றில், தி.மு.க., எதிர்ப்பில் தான், அ.தி.மு.க., - ம.தி.மு.க., - தே.மு.தி.க., தற்போது த.வெ.க., வரை உருவாகி இருக்கின்றன. இதில், தி.மு.க., எதிர்ப்பில் உறுதியாக இருந்ததால் தான், அ.தி.மு.க.,வால் எதிர்க்கட்சி அந்தஸ்திலும் இருக்க முடிந்தது. இன்று, ஸ்டாலின் தான் தி.மு.க.,வின் முகம், அதனால், ஸ்டாலின் தான் தி.மு.க. அவரை எதிர்ப்பதில் கவனம் செலுத்தினால் தான், தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை அ.தி.மு.க.,வால் பெற முடியும்.

அது சிதறினால், அ.தி.மு.க.,வுக்கு இழப்பு தான். அ.தி.மு.க.,வுக்கு லாபம் கிடைக்காதபடி, தங்களுக்கு எதிரான ஓட்டுகளை சிதறடித்தாலும் தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்ற வியூகத்தின்படி, ஸ்டாலின் மீதான எதிர்ப்பு அரசியலை ஒன்றுகுவிய விடாமல், உதயநிதி பார்த்துக் கொள்கிறார். அதில் அவர் வெற்றியும் அடைந்துள்ளார்.

Advertisement