நெல்லுக்கு ஊக்கத்தொகை தர மத்திய அரசு தடையா? ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் நிர்மலா பதிலடி

38


சென்னை: 'குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் ஊக்கத் தொகை அல்லது போனஸ் அறிவிப்பது என்பது, எப்போதும் மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது. அதை யாரும் பறிக்கவில்லை' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.

தஞ்சையில் நடந்த பிரசார கூட்டத்தில், 'நெல்லுக்கு அளித்து வரும் ஊக்கத்தொகையை நிறுத்துமாறு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதை மறுத்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு உள்ள அறிக்கை:
மாநில அரசுகள் வழங்கும் ஊக்கத்தொகை கொள்கைகளை, தேசிய முன்னுரிமை களுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ஒரு ஆலோசனை மட்டுமே, அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டது.

சுய சார்பு




மத்திய அரசின் இந்த ஆலோசனை, பயிர் பல்வகைப்படுத்துதலை ஊக்குவித்தல் மற்றும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றில் சுயசார்பு அடைவதை நோக்கமாக கொண்ட ஒரு ஆக்கப்பூர்வமான தொலைநோக்கு பார்வை. இதன் வாயிலாக, உள்நாட்டு தேவை அதிகமுள்ள பயிர்களை, விவசாயிகள் சாகுபடி செய்து, அதிக லாபம் பெற வழி வகை செய்யப்படும்.


குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் ஊக்கத்தொகை அல்லது போனஸ் அறிவிப்பது என்பது, எப்போதும் மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது. அந்த அதிகாரத்தை யாரும் பறிக்கவில்லை. தேச நலனில் அக்கறை கொண்டு செயல்படுவதற்கு பதிலாக, தங்களின் குறுகிய சுயநல அரசியல் ஆதாயத்திற்காக திட்டமிட்டு, திசை திருப்பும் நடவடிக்கைகளில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். தேசம் தீர்வுகளை தேடும் போது, தி.மு.க., சர்ச்சைகளை உருவாக்குகிறது.

மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும் போது, தி.மு.க., அதை தேர்தல் அரசியலுக்காக சுரண்ட பார்க்கிறது. அரசியலமைப்பு சட்டப்படி, உயர் பதவியில் இருக்கும் ஒரு முதல்வருக்கு இத்தகைய நடத்தை அழகல்ல. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஒவ்வொரு விவசாயிக்காகவும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சோர்வின்றி தொடர்ந்து பணியாற்றும். இத்தகைய திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பிரச்னைகளால், நாங்கள் ஒரு போதும் பின்வாங்க மாட்டோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: மாநில தலைமை செயலர்களுக்கு, ஜன., 9ல் நிதித்துறை செயலர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதம், மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட ஓர் ஆலோசனையே தவிர, அது ஒரு கட்டாய உத்தரவு அல்ல.



விவசாயிகளை ஆதரிப்பதற்காக, மத்திய அரசு பல்வேறு பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்கிறது. இருப்பினும், பல மாநிலங்களில் குறிப்பாக வட மாநிலங்களில் சாகுபடி என்பது கோதுமை மற்றும் நெல் பயிரை நோக்கியே அதிகம் உள்ளது.

பரப்பு குறைகிறது



மாநில அரசுகள், இந்த பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் கூடுதல் ஊக்கத்தொகை அறிவிக்கும் போது, அது, அவற்றின் சாகுபடியையே மீண்டும் மீண்டும் ஊக்குவிக்கிறது. இதனால், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் பயிரிடும் பரப்பு குறைகிறது. எனவே, தேச நலன் கருதி, பயிர் பல்வகைப்படுத்துதலை ஊக்குவிப்பதன் வாயிலாக, மத்திய அரசு ஒரு பொறுப்பான மற்றும் தொலைநோக்கு பார்வையிலான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.



வட மாநிலங்களின் சில பகுதிகளில், கோதுமை மற்றும் பல மாநிலங்களில் நெல் ஆகியவற்றை மட்டுமே பயிரிடும் ஒற்றைப்பயிர் சாகுபடியை தவிர்ப்பதே, இதன் முக்கிய நோக்கம். பயிர் பல்வகைப்படுத்துதல் வாயிலாக, விவசாயிகளின் லாபம் மேலும் அதிகரிக்கும். மாநிலங்கள் தங்கள் விவசாய கொள்கைகளை, விரிவான தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.


இது, விவசாயிகள், நுகர்வோர் மற்றும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் நன்மை பயக்கும் ஒரு கூட்டு பொறுப்பாகும். இதை, ஒரு திணிப்பாக சித்தரிக்க முயல்வதோ அல்லது அதன் நோக்கத்தை திட்டமிட்டு தவறாக புரிந்து கொள்வதோ, உண்மைகளை திரித்து கூறுவதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement