சுத்தமான குடிநீர் வழங்குங்களேன்! நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

மேட்டுப்பாளையம்: பவானி ஆற்றில் சிறுமுகையின் கழிவுநீர் கலந்து வருவதால், தண்ணீரை குடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பில்லுார் அணையிலிருந்து வரும் பவானி ஆறு, மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக பவானிசாகர் அணைக்கு செல்கிறது. மேட்டுப்பாளையம் நகரின் கழிவுநீரும், சிறுமுகையின் கழிவு நீரும், பவானி ஆற்றில் கலந்து வருகிறது. மேலும், ஏழு எருமை பள்ளத்தில் வரும் கழிவு நீர், மூளையூர் அருகே பவானி ஆற்றில் கலக்கிறது. கடந்த ஒரு மாதமாக ஆற்றில் நீரோட்டம் இல்லாமல் இருந்ததால், கழிவுநீர் மட்டுமே ஓடியது. இந்த நீரை மூளையூரில் உள்ள நீரேற்று நிலையத்திலிருந்து, முடுதுறை, சின்னக்கள்ளிப்பட்டி, இரும்பறை, இலுப்பநத்தம், பெள்ளேபாளையம், ஜடையம்பாளையம் ஆகிய ஆறு ஊராட்சிகளின், கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு பம்பிங் செய்து வந்தனர்.

பொதுமக்கள் கூறியதாவது:

குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், ஊராட்சிகளில் வழங்கப்படும் நீரை குடிக்கும் போது, ஒரு வித துர்நாற்றம் அடிக்கிறது. இரண்டு, மூன்று நாட்களுக்கு மேல் இருப்பு வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. தற்போது ஆற்றில் நீர் சிறிதளவு வருகிறது. அதுவும் கழிவு நீர் கலந்து வருகிறது. இதை குடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, அனைத்து ஊராட்சிகளுக்கு, திருப்பூர் மற்றும் சூலுார் குடிநீர் திட்டத்தில் இருந்து சுத்தமான குடிநீர் வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement