நோயாளிக்கு குளுக்கோஸ் போட்ட துாய்மை பணியாளர் 'டிஸ்மிஸ்'

ஆற்காடு: அரசு மருத்துவமனை நோயாளிக்கு, குளுக்கோஸ் போட்ட துாய்மை பணியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில், கலவை சாலை, அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் ஆற்காடு டவுனை சேர்ந்த, 40 வயது பெண் ஒருவர், வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனை துாய்மை பணியாளர் ஒருவர் குளுக்கோஸ் போட்டதாக கூறப்படுகிறது.

அதிர்ச்சியடைந்த, நோயாளியின் உறவினர்கள் தகவலின்படி, அங்கு வந்த நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் குபேந்திரன், 'மருத்துவ பணிகளை, துாய்மை பணியாளர் எதற்காக செய்கிறீர்கள்' எனக்கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி, சர்ச்சையை ஏற்படுத்தியது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அரசு மருத்துவர் தான், நோயாளிக்கு மருத்துவம் பார்த்தார். அதேசமயத்தில், வேறு நோயாளி மருத்துவமனைக்கு வந்ததால், மருத்துவர் அங்கு சென்றுவிட்டார். அப்போது, துாய்மை பணியாளர், குளுக்கோஸ் 'லாக்' செய்துள்ளார்.

'இதுகுறித்து, விசாரணை நடத்தி, தற்காலிக துாய்மை பணியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணியில் இருந்த செவிலியருக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement