மே.பாளையம் - திருச்செந்துாருக்கு வேண்டும் சிறப்பு ரயில்! ஆன்மிகம் முதல் அத்தியாவசிய தேவைகள் நிறைவேறும்

மேட்டுப்பாளையம்: ''மேட்டுப்பாளையம் ---- திருச்செந்துார் இடையே சிறப்பு ரயில் இயக்கினால், பழனி, திருச்செந்துாருக்கு ஆன்மிக பயணம் கொள்ளும் பக்தர்கள் பயன்பெறுவர்' என வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் மிகப்பெரிய அளவில் மொத்த காய்கறி மார்க்கெட், உருளைக்கிழங்கு மண்டிகள், பூண்டு மார்க்கெட், வாழை சந்தை, கருவேப்பிலை சந்தை உள்ளிட்டவைகள் உள்ளன. உருளைக்கிழங்குகள், துாத்துக்குடி துறைமுகம் வழியாக, மாலத்தீவு, இலங்கை உட்பட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேட்டுப்பாளையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு காய்கறிகள், உருளைக்கிழங்கு, பூண்டு போன்றவைகள் லாரிகள் மற்றும் சொந்த வாகனங்களில் விவசாயிகள் எடுத்து செல்கின்றனர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து பழனி, திண்டுக்கல், துாத்துக்குடி வழியாக திருச்செந்துாருக்கு ரயில் இயக்கினால் கோவை, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுவர். அதே போல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் பலரும், முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு குடும்பத்தினருடன் சென்று தரிசனம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் இயக்கினால், பழனி, திருச்செந்தூருக்கு செல்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.

இதுகுறித்து, ரயில் நல பயணிகள் சங்கம் (கோவை, திருப்பூர், திண்டுக்கல்) மாவட்டங்களின் ஒருங்கிணைந்த செயலாளர் மோகன் கூறியதாவது:

மேட்டுப்பாளையம் ---- திருநெல்வேலி இடையே வாரம் ஒருமுறை இரவு நேர ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதே போல் வாரம் இருமுறை துாத்துக்குடிக்கு இயக்கப்படுகிறது. இதனால் பல ஆயிரம் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். மேட்டுப்பாளையம் ---- திருச்செந்துார் இடையே சிறப்பு ரயில் இயக்கினால், பழனி, திருச்செந்துாருக்கு ஆன்மிக பயணம் கொள்ளும் பக்தர்கள் பயன்பெறுவர்.

தற்போது, பாலக்காடு --- திருச்செந்துார் ரயிலில் செல்ல வேண்டும் என்றால், கோவையில் இருந்து பாசஞ்சர் ரயில் வாயிலாக பொள்ளாச்சி சென்று அங்கு ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. திரும்பி வரும் போதும் இதே நிலை தான். இண்டர்சிட்டி ரயில் போல் பகல் நேரத்தில் ரயில் இயக்கினால் இடங்களும் அதிகம் கிடைக்கும். பக்தர்கள் தங்களது வசதிக்கு ஏற்றார் போல் சென்று வரலாம்.

தென்மாவட்டங்களுக்கு காய்கறிகளை எடுத்து செல்வதில் சிரமம் உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்செந்துாருக்கு ரயில் இயக்கினால், மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்ட விவசாயிகள், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சென்று தங்கள் காய்கறிகளை விற்பனை செய்ய முடியும். அதே போல், ஒட்டன்சத்திரத்தில் இருந்து சின்னவெங்காயம் போன்றவை மேட்டுப்பாளையம் எடுத்து வந்து விற்பனை செய்ய முடியும். விவசாயிகளுக்கு ரயில் மட்டுமே குறைந்த கட்டணத்தை தர முடியும்.

இவ்வாறு, அவர் கூறினார்.---

Advertisement