பிளாஸ்ட் தேர்தல் களத்தை தெறிக்க விடும் கலர் பேப்பர்கள்
கோவை: கோடை வெயிலின் சூட்டை விட, கோவை அரசியல் களத்தின் சூடு அதிகமாக உள்ளது. 'பெரியோர்களே.. தாய்மார்களே' என்று கைகூப்பி பிரசாரம் செய்த காலம் இப்போது மாறிவிட்டது. டி.ஜே. பாட்டும், பேப்பர் பிளாஸ்டும் தான் இந்த தேர்தலின் டிரெண்ட்.
பிரசாரம் செய்ய வரும் தலைவர்களுக்கு மலர் துாவி வரவேற்பது குறைந்து விட்டது. பேப்பர் பிளாஸ்டில் அந்தந்த கட்சி கொடியின் நிறத்திலேயே பிரமாண்டமாக பேப்பர் மழை பெய்ய செய்கின்றனர்.
இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள உக்கடம் 'டி.ஜே பேப்பர் கோவை' நிறுவன உரிமையாளர் தினேஷ் சொல்கிறார்:
டிரம்ஸ், ஜமாப், பறை, வரவேற்பு பொம்மைகளை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். 3 ஆண்டுகளுக்கு முன் 'பேப்பர் பிளாஸ்டர்' கருவி வாங்கினேன். விநாயகர் சதுர்த்தி, கோயில் நிகழ்ச்சிகளுக்கு பேப்பர் பிளாஸ்டர் பயன்படுத்தி வந்தோம். பளபளக்கும் பல ஜிகினா காகித துண்டுகள் வானில் இருந்து மழை போல் கொட்டுவதை குழந்தைகளும் பெரியவர்களும் வெகுவாக ரசித்தார்கள்.
பளபளப்புக்கு பதிலாக கட்சி கொடிகளின் வண்ணத்தை பயன்படுத்தினால் என்ன என்று தோன்றியதன் விளைவு 'பார்ட்டி பேப்பர் பிளாஸ்டர்'. எல்லா கட்சியினரும் விரும்புகிறார்கள். பேப்பர் பிளாஸ்டர் இயந்திரம் காஸ் மூலம் இயங்குகிறது. அரை கிலோ பேப்பர் தாங்கும் 'கன்', முதல் 3 கிலோ பேப்பர் தாங்கும் 'ஜம்போ கேனன்' வரை பேப்பர் பிளாஸ்டரில் 5 வகைகள் உள்ளன. ஜம்போ இயந்திரத்தில் அழுத்தம் அதிகம் என்பதால் 100 மீட்டர் தொலைவுக்கு கூட பேப்பர்கள் பறக்கும்.
ஒரு நிகழ்ச்சிக்கு 15 கிலோ கலர் பேப்பர் தேவைப்படும். கலர் பேப்பர்கள் ஒரு கிலோ ரூ.200. ஒருமுறை காஸ் நிரப்பினால் 10 ஷாட் அடிக்க முடியும். ஒரு ஷாட்டுக்கு ரூ.1,000 மற்றும் வண்டி வாடகை கட்டணமாக வாங்குகிறோம். செலவு போக ரூ.4,000 - 5,000 லாபம் கிடைக்கும்.
நான் இந்த இயந்திரத்தை பெங்களூரில் 50,000 ரூபாய்க்கு வாங்கினேன். இப்போது கோவையிலேயே ரூ.15,000க்கு கிடைக்கிறது. முன்பு சில நிறுவனங்கள் தான் இருந்தன. இன்றைக்கு எங்கள் தொழிலில் போட்டி அதிகமாகி விட்டது, என்கிறார் தினேஷ். புதுசு புதுசாக கட்சிகள் வந்தால் சந்தோஷம்தானே? என்றால் சிரிக்கிறார்.
மேலும்
-
விக்டோரியா எட்வர்டு மன்றத்திற்கு தேர்தல் நடத்த 6 மாதம் அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
இறந்து கரை ஒதுங்கிய ராட்சத கடல் பசு
-
மதுரை தி.மு.க., பிரமுகர் வீட்டில் ஐ.டி., ரெய்டு
-
குமுளியில் கூடுதல் பஸ் வசதியின்றி ஐயப்ப பக்தர்கள், பயணிகள் அவதி
-
இடுக்கியில் வீடுகளில் பிரசவம் அதிகரிப்பு
-
ரூ.10 கோடி நகைகள் சோதனையில் சிக்கின