வாக்குறுதிக்கு இனி 'வாய்தா' இல்லை :வேட்பாளர்களிடம் விவசாயிகள் திட்டவட்டம்
காங்கயம்:காங்கயம் தொகுதி விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கைகளை மையப்படுத்தி ஆலாம்பாடியில் 'காங்கயம் விவசாயிகள் கூட்டமைப்பு' ஏற்படுத்தப்பட்டது. கூட்டமைப்பு சார்பில், பி.ஏ.பி. நீர்ப்பாசன சங்க தலைவர் வேலுசாமி தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், எல்.பி.பி. கான்கிரீட் எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ரவி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
முக்கியத் தீர்மானங்கள்:
நீர் மேலாண்மை மற்றும் திட்டங்கள்
* பாண்டியாறு - புன்னம்புழா மற்றும் ஆனைமலையாறு - நல்லாறு நதிநீர் இணைப்புத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
* கீழ்பவானி கால்வாயை மண் கால்வாயாகவே பராமரிக்க வேண்டும்; பாசன சபை தேர்தலை உடனே நடத்த வேண்டும்.
* பி.ஏ.பி. திட்டத்தில் காங்கயம் - வெள்ளக்கோவில் பகுதிகளுக்குச் சமச்சீர் நீர் பங்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.
* வட்டமலைக்கரை அணைப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதுடன், நீர் நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
* நொய்யல், பவானி ஆறுகளில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும்; தொழிற்சாலைகளே நீரை மறுசுழற்சி செய்ய வேண்டும்.
* பெருந்துறை 'சிப்காட்' கழிவுநீரால் பாதிக்கப்பட்ட சென்னிமலை பகுதி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதோடு, மாசுக் கட்டுப்பாட்டை உறுதி செய்ய வேண்டும்.
விவசாயிகள் நலன்
* கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்; ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும்.
* கால்நடைகள் உயிரிழப்பிற்குச் சந்தை மதிப்பில் இழப்பீட்டை கலெக்டரே வழங்க அதிகாரம் வேண்டும்.
* கறிக்கோழி வளர்ப்புக் கூலியை உயர்த்த வேண்டும்; மானியத் தொகையை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.
* இனாம் நிலப் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.
வேட்பாளரை நோக்கி...
''காங்கயம் பகுதி, கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. நுாற்றாண்டு பழமை வாய்ந்த பனை மரங்கள் கூட காய்ந்துள்ளன. ஒரே இடத்தில் வேட்பாளர்களை வரவழைத்து அவர்களிடம் உறுதிமொழி பெறுவதில் சில சிக்கல்கள் இருப்பதால், ஒவ்வொரு விவசாய சங்கத்தினரும் தனித்தனியாக வேட்பாளர்களை சந்தித்து, கோரிக்கையை விளக்கி உறுதிமொழி பெறுவது என முடிவெடுத்துள்ளோம்'' என்கின்றனர் இதன் நிர்வாகிகள்.
---
காங்கயம் விவசாயிகள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
காங்கயம் பகுதி கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. பனைமரங்கள் கூட காய்ந்துள்ளன.
@block_B@ வேட்பாளர்களிடம் உறுதிமொழி தேர்தலில் வெற்றி பெற்று கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் போராட்டங்களை வலுவாக நடத்துவது என முடிவெடுத்துள்ளோம். இந்த புதிய அமைப்பில், பி.ஏ.பி. நீர் பாதுகாப்பு சங்கம், எல்.பி.பி சங்கம், 'சிப்காட்' காங்கயம் விளைநில பாதுகாப்பு சங்கம், காங்கயம் நொய்யல் பாசன விவசாயிகள், வட்டமலைக்கரை விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்துள்ளன. - காங்கயம் விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள்.block_B