கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் :அவிநாசி தி.மு.க. வேட்பாளர் உருக்கம்

அவிநாசி :அவிநாசி தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கோகிலாமணி, ஒன்றிய பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து, ஓட்டு வேட்டை நடத்தினார்.

அவிநாசி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கோகிலாமணி, அவிநாசி ஒன்றிய கிராமப் பகுதிகளான உப்பிலிபாளையம், பனப்பாளையம், அரசப்பம்பாளையம், மேட்டு காலனி, நரியம்பள்ளி புதுார், ஆதிதிராவிடர் குடியிருப்பு, செங்காளிபாளையம், தொட்டக்களம்புதுார் மற்றும் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அவருக்கு பெண்கள் உற்சாகத்துடன் ஆரத்தி எடுத்து சால்வை, மாலை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர். இளம்பெண்கள் வேட்பாளருடன் கைகுலுக்கி, தங்கள் போனில், செல்பி படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர். தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. அரசின் ஐந்தாண்டு சாதனை திட்டங்கள் குறித்தும், தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறியும் பிரசாரம் செய்தார்.



பிரசாரத்தில், கோகிலாமணி பேசுகையில், ''அவிநாசியை சேர்ந்த என்னை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்தால் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகளை கேட்டறிந்து தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவேன். எனக்கு இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்,'' என கேட்டுக்கொண்டார்.



பிரசாரத்தில், மா.கம்யூ. மூத்த தலைவர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் எல்.ஐ.சி. அவிநாசியப்பன் உட்பட பலர் உடன் சென்றனர்.

Advertisement