தேனி பஸ் ஸ்டாண்டில் கான்கிரீட் கழிவுகளால் பயணிகள் அவதி

தேனி:தேனி பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் சீரமைப்பு பணிக்காக அகற்றப்பட்ட கான்கிரீட் கட்ட கழிவுகள் பல நாட்களாக அகற்றப்படாததால் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டு அவதியடைகின்றனர்.

தேனி புது பஸ் ஸ்டாண்டில் நகராட்சி சார்பில் ரூ.1.82 கோடியில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக பழைய சிமென்ட் கான்கிரீட் தரைகள் அகற்றப்பட்டு புதிதாக அமைக்கப்படுகிறது. போடி பஸ்கள், அதிவிரைவு போக்குவரத்து கழக பஸ்கள் நிற்கும் நடைமேடை அருகே இரு வாரங்களுக்கு முன் கான்கிரீட் தரையின் ஒரு பகுதி பெயர்த்து எடுக்கப்பட்டது. ஆனால் எடுக்கப்பட்ட கான்கிரீட் கழிவுகளை எடுத்து செல்லாமல் அப்படியே விட்டனர்.

தற்போது புதிதாக கான்கிரீட் தளம் அமைத்துள்ளனர். கான்கிரீட் கழிவுகளை அகற்றாததால் பஸ்கள் வருவதற்கு இடையூறாக உள்ளது. பஸ்களை உரிய ரேக்குகளில் நிறுத்த முடிவதில்லை. இதனால் பயணிகளும் சிரமம் அடைகின்றனர். நகராட்சி அதிகாரிகளிடம் கூறினாலும் நடவடிக்கை இல்லை என போக்குவரத்து கழகத்தினர் புலம்புகின்றனர். நகராட்சி அதிகாரிகள் பயணிகள், பிற துறையினருக்கு இடையூறு இன்றி பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement