களிமண்குண்டில் காட்சி பொருளான ஆர்.ஓ., பிளான்ட் அரசு நிதி வீணடிப்பு

பெரியபட்டினம்: பெரியபட்டினம் அருகே களிமண்குண்டு கிராமத்தில் 2022-ல் அமைக்கப்பட்ட உவர்நீரை நன்னீராக்கும் ஆர்.ஓ., பிளான்ட் தற்போது வரை பயன்பாடின்றி காட்சி பொருளானதால் அரசு நிதி ரூ.12 லட்சம் வீணடிக்கப் பட்டுள்ளது.

ஜல்ஜீவன் திட்டத்தில் களிமண்குண்டு மற்றும் வேலாயுதபுரம் ஆகிய கிராமங்களில் 60 ஆயிரம் லி., கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி 2022ல் கட்டப்பட்டது.

உள்ளூரில் உள்ள கிணறுகளின் மூலமாக அவற்றில் குடிநீர் ஏற்றம் செய்யப்படும் வகையில் கட்டமைக்கப்பட்டது. தற்போது வரை அவற்றில் தண்ணீர் ஏற்றப்படாமல் காட்சி பொருளாகவே உள்ளது.

களிமண்குண்டு கிராம மக்கள் கூறியதாவது:

திருப்புல்லாணி யூனியன் நிர்வாகம் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க காட்சி பொருளாக உள்ள ஆர்.ஓ., பிளான்டை பழுது நீக்கி அவற்றிலிருந்து தண்ணீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

மத்திய அரசு செயல்படுத்தி உள்ள ஜல்ஜீவன் திட்டத்தில் அமைக்கப்பட்ட இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இவ்விஷயத்தில் முறையான விதிமுறைகளை வகுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement