திருவள்ளூரில் அரசு கலை கல்லுாரி அமையும் வாக்குறுதி அளித்தார் அ.தி.மு.க., ரமணா

திருவள்ளூர்: ''திருவள்ளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் கிராமங்களில் விளையாட்டு திடல் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படும்,'' என, அ.தி.மு.க., வேட்பாளர் ரமணா தேர்தல் வாக்குறுதி அளித்து ஓட்டு சேகரித்தார்.

திருவள்ளூர் சட்டசபை தொகுதியில், தே.ஜ., கூட்டணி சார்பில், அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் பி.வி.ரமணா போட்டியிடுகிறார். இவர், நேற்று பூண்டி ஒன்றியத்தில், கிராமங்கள் தோறும் மக்களை சந்தித்து ஓட்டுக் கேட்டார். சித்தம்பாக்கம், சீயஞ்சேரி, ராமதண்டலம், நெய்வேலி, பங்காரம்பேட்டை, திருப்பேர் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட கிராமங்களில், அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தார்.

அப்போது, ரமணா பேசியதாவது:

திருவள்ளூர் தொகுதியில் வேலைவாய்ப்பிற்கான தொழிற்சாலை கட்டமைப்பு இல்லை. கிராம மக்களை முன்னேற்ற வேலைவாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. மாவட்ட தலைநகரான திருவள்ளூரில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இல்லை.

இதனால், கிராமங்களைச் சேர்ந்த மாணவ - மாணவியர் உயர்கல்வி பயில, சென்னைக்கு செல்ல வேண்டியுள்ளது . பூண்டி ஒன்றியத்தில், அரசு போக்குவரத்து வசதி இல்லாததால், கூடுதல் பணம் செலவழித்து, ஆட்டோக்களில் சென்று வருகின்றனர். மாணவ - மாணவியர் நடந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.

அ.தி.மு.க., ஆட்சி அமைந்தால், திருவள்ளூரில் அரசு கலை கல்லுாரி அமைக்கப்படும். கிராமங்களை ஒருங்கிணைத்து விளையாட்டு திடல் அமைக்கப்படும். நெல் விவசாயிகளின் துயர் நீக்க, ஒவ்வொரு கிராமத்திலும் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்.

கடம்பத்துார், பூண்டி ஒன்றியத்தில் மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருவாலங்காடு சர்க்கரை ஆலை நவீனப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement