ஆந்திராவில் வேன் மீது டேங்கர் லாரி மோதி விபத்து; கர்நாடகா பக்தர்கள் 8 பேர் பலி

குர்னூல் : ஆந்திராவில் ஆட்களை ஏற்றிச் சென்ற சரக்கு வேன் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது; ஆந்திராவில் உள்ள மந்த்ராலய ஸ்ரீ ராகவேந்திர கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, கர்நாடகாவின் சிக்கமகலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேர் பொலிரோ வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை குர்னூல் மாவட்டத்தில் உள்ள கல்லுதேவகுண்டா கிராமத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிர்திசையில் வேகமாக வந்த சிமெண்ட் மற்றும் மணல் ஏற்றி வந்த டேங்கர் லாரி, பொலிரோ மீது மோதியது.

இந்த விபத்தில் பொலிரோவில் பயணித்தவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எஞ்சியவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 8ஆக அதிகரித்தது.

ஓட்டுநரின் கவனக்குறைவா? அல்லது வேறு ஏதேனும் இந்த விபத்திற்குக் காரணமா என்பது குறித்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

Advertisement