அச்சம் குடிநீர் கிணற்றில் சாக்கடை கழிவு நீர் கலப்பு பேரூராட்சி நிர்வாக அலட்சியம் தொடர்கிறது

திருப்புவனம்: திருப்புவனம் புதுார் வைகை ஆற்றுப்பகுதியில் குடிநீர் திட்ட கிணற்றில் சாக்கடை கழிவு நீர் கலப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருப்புவனம் கோட்டை பகுதி வைகை ஆற்றில் ஆழ்துளை கிணறு மூலமும், புதுார் வைகை ஆற்றுப்பகுதியில் திறந்த வெளி கிணறு மூலமும் தண்ணீர் எடுத்து நகர் முழுவதும் குடிநீர் விநியோகம் பேரூராட்சி சார்பில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் காலை ஒன்றரை மணி நேரம் மட்டும் செய்யப்படுகிறது. திருப்புவனம் புதுார் குசவன்கோயில் தெரு, கொண்டையதாசர் மடத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வைகை ஆற்றில் நேரடியாக சுத்திகரிக்காமல் அப்படியே வெளியேற்றப்பட்டது.

புதுார் வைகை ஆற்றுப்படுகையில் கானுார் அணை கட்டிய பின் அணைக்கு முன்னும் பின்னும் கரைகள் புதிதாக அமைக்கப்பட்டது. இதனால் வைகை ஆற்றினுள் கழிவு நீர் செல்ல முடியாமல் திறந்த வெளி கிணற்றை சுற்றிலும் சாக்கடை கழிவு நீர் இரண்டு அடி உயரத்திற்கு தேங்கியுள்ளது. வீடுகளில் பெரும்பாலும் செப்டிக் டேங்க் அமைக்காமல் கழிவுகளை அப்படியே சாக்கடையில் வெளியேற்றி வருகின்றனர். குடிநீர் திட்ட கிணற்றை சுற்றிலும் இந்த கழிவு நீர் தேங்குவதால் குடிநீர் துர்நாற்றம் வீசுகிறது.

கழிவு நீர் நேரடியாக குடிநீர் கிணற்றில் கலப்பதால் குடிநீரின் நிறம் மாறியதுடன் கழிவு நீர் கலந்து கருப்பு நிறத்தில் விநியோகிக்கப்படுகிறது. குடிநீரில் புழு, பூச்சி கலந்து வருவதால் குடிக்க மட்டுமல்ல பிற பயன்பாட்டிற்கும் பயன்படுத்த முடிவதில்லை.

இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வைகை ஆற்றில் கழிவு நீர் கலக்கும் இடங்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி கலெக்டர்கள் நேரடியாக வந்து பார்வையிட்டனர்.


ஆனாலும் இன்று வரை நகரின் ஒட்டு மொத்த கழிவு நீரும் வைகை ஆறு, வரத்து கால்வாய் உள்ளிட்டவற்றில் நேரடியாக திறந்து விடப்படுகிறது. பேரூராட்சியில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் போதே கழிவு நீர் வைகை ஆறு, வரத்து கால்வாயில் செல்லும் படி தான் அமைக்கப்படுகிறது. இதனால் சுகாதாரமற்ற குடிநீரையே பொதுமக்கள் குடிக்க வேண்டியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் குடிநீர் கிணற்றை சுற்றி தேங்கும் கழிவு நீரை அப்புறப்படுத்துவதுடன் மீண்டும் கழிவு நீர் தேங்காவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement