தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் இல்லாத நேரத்தில் தாயிடம் ஆசி பெற்ற அன்புமணி
திண்டிவனம்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், பிரசாரத்திற்கு சென்றுவிட்ட நிலையில், தைலாபுரம் தோட்டத்தில், தாயை சந்தித்து, அன்புமணி ஆசி பெற்றார்.
பா.ம.க.,வில் பிளவு ஏற்பட்டு, ராமதாஸ் மற்றும் அன்புமணி தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் அன்புமணி தரப்பில் போட்டியிடும் 18 வேட்பாளர்கள் மாம்பழ சின்னத்தில் போட்டியிடும் நிலையில், ராமதாஸ் தரப்பினர் சசிகலா ஆரம்பித்துள்ள புதிய கட்சியுடன் இணைந்து 30 தொகுதிகளில் வேட்பாளர்களை சுயேட்சையாக நிறுத்தி சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
கட்சியில் பிளவு ஏற்பட்டு, அன்புமணியை கட்சியை விட்டு ராமதாஸ் நிக்கிவிட்ட நிலையில் தைலாபுரம் தோட்டத்திற்கு அன்புமணி வருவதில்லை. கடந்த 8 மாதங்களாக தோட்டம் பக்கம் வராமல் அன்புமணி இருந்தார்.
இந்நிலையில், ராமதாஸ் சேலம், தர்மபுரி பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக சென்றுவிட்டார். இதற்கிடையில் கடலுாரில் பிரசாரத்திற்கு செல்ல காரில் வந்த அன்புமணி, தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து, தன்னுடைய தாயார் சரசுவதி அம்மாளை சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றார். தாயாருடன் மதிய உணவு அருந்திய அன்புமணி, 2:00 மணியளவில் அங்கிரந்து புறப்பட்டு கடலுார் சென்றார்.
ராமதாஸ் மற்றும் அவரது மகள் ஸ்ரீகாந்தி இருவரும் பிரசாரத்திற்கு வெளியூர் சென்றுவிட்ட நிலையில், தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து அன்புமணி அவரது தாயாரை ரகசியமாக சந்தித்துவிட்டு சென்ற சம்பவம், பா.ம.க.,வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.