விழுப்புரம் கிறிஸ்தவ ஆலயங்களில் தி.மு.க., வேட்பாளர் ஆதரவு திரட்டல்
விழுப்புரம்: விழுப்புரம் தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்களிடம், விழுப்புரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் லட்சுமணன் ஆதரவு திரட்டினார்.
விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு மாதா கோவில் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பங்கு தந்தையர்கள், கிறிஸ்தவ மக்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
சிறப்பு வழிபாடு முடிந்து வெளியே வந்த கிறிஸ்தவ மக்களிடம், விழுப்புரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் லட்சுமணன் நேரில் சந்தித்து, விழுப்புரம் தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் தனக்கு வாக்களிக்கும்படி ஆதரவு திரட்டினார்.
அப்போது, தி.மு.க., அரசின் சாதனை திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி, கட்சியினர் ஆதரவு திரட்டினர். தி.மு.க., மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஜனகராஜ், கண்ணப்பன், நகர செயலர் வெற்றிவேல், கவுன்சிலர்கள் புருஷோத்தமன், மணவாளன், சாந்தராஜ், ஜனனி தங்கம், மணி மற்றும் தி.மு.க., கூட்டணி கட்சியினர் பலர் கலந்துகொண்டு, கிறிஸ்தவ மக்களிடம் ஆதரவு திரட்டினர். இதே போல், பல கிறிஸ்தவ தேவாலயங்களில் தி.மு.க., வினர் ஆதரவு திரட்டினர்.